< Back
ஆன்மிகம்
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்
ஆன்மிகம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
17 Oct 2022 5:41 PM IST

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

சென்னை மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, கடந்த 7-ந் தேதி திருநாம கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் தினமும் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதிவலம் வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை-உகப்படிப்பும், பின்னர் திருத்தேர் அலங்காரம் செய்தல், பணிவிடை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி பதிவலம் வந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

வடம் பிடித்து இழுத்தனர்

முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் நாதஸ்வரம், செண்டை, உருமி மேளம் முழங்கப்பட்டது. பின்னர் இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரம், 36 டன் எடைகொண்ட திருத்தேரில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி மணலி புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சமத்துவ மக்கள் கழக மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், முன்னாள் எம்.பி. ஜெயதுரை, நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க நிர்வாகி கொட்டிவாக்கம் ஏ. முருகன், திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தேசிய நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.விஜயக்குமார், தர்மபதி நிர்வாக தலைவர் துரைப்பழம், பொருளாளர் ஜெயக்கொடி, சட்ட ஆலோசகர் ஐவென்ஸ், நிர்வாகிகள் சுந்தரேசன், மனுவேல், கிருபாகரன், பாலகிருஷ்ணன், கண்ணன் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், "அய்யா அரகர சிவ சிவ, அய்யா உண்டு" என பக்தி பரவசத்துடன் விண்ணதிர பக்தி கோஷம் முழங்கியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வீதி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

தேர் செல்லும் வழியில் பக்தர்களுக்கு நீர், மோர் அன்னதானம் வழங்கினர். இரவு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அய்யா இந்திர விமானத்திலும், இரவு பூம்பல்லக்கு வாகனத்திலும் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து திருநாமக்கொடி அமர்வுடன் திருவிழா நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்