மகா சங்கடஹர சதுர்த்தி: இந்த ஒரு நாள் போதும்.. 12 மாத விரத பலனும் கிடைக்கும்
|விநாயகப் பெருமானை வழிபட மகா சங்கடஹர சதுர்த்தி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு குறிப்பிட்ட திதி சிறப்பானது. அந்த வகையில் விநாயகருக்கு சதுர்த்தி திதி சிறப்பு. விநாயகர் பிறந்தது வளர்பிறை சதுர்த்திதான். என்றாலும் தேய்பிறை சதுர்த்தி என்பது அவருக்கு பிடிக்கும். இதையே சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.
'ஸங்கட ஹர' என்றால் 'சங்கடங்களை தீர்ப்பவர்' என பொருள். இந்த சதுர்த்தியை விநாயகரே ஏற்படுத்தினார். குண்டாக இருக்கும் விநாயகரைக் கண்ட சந்திரன் கிண்டல் செய்தார். பதிலடியாக சாபமிட்டார் விநாயகர். அதற்காக வருந்திய சந்திரன் மன்னிப்பு கோரினார்.
மன்னித்ததோடு தன்னுடன் சேர்த்து சந்திரனையும் வழிபட வேண்டும் என ஆணையிட்டார் விநாயகர். இது பற்றி, 'தேய்பிறை சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் மனம் குளிர்வேன். சங்கடங்களை போக்குவேன். பூஜையின் முடிவில் சந்திரனையும் வணங்குங்கள்' என்றார் விநாயகர்.
மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் குடும்பத்தில் சங்கடங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க தொடங்கி 12 மாதங்கள் விரதம் கடைப்பிடிப்பார்கள்.
விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்திக்கு (ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி) மஹா சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். விநாயகப் பெருமானை வழிபட மகா சங்கடஹர சதுர்த்தி முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி தினத்திலும் வழிபாடுகள் செய்த பலனை, மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபடுவதால் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.
அவ்வகையில், வரும் 22-ம் தேதி மகா சங்கடஹர சதுர்த்தி வருகிறது. அன்றைய தினம் மாலை 6.15 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 3.48 மணியுடன் சதுர்த்தி திதி முடிவடைகிறது. மாலையில் திதி ஆரம்பித்தாலும், சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை விரதம் அனுஷ்டிப்பது மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது.
இந்நாளில் விரதம் இருப்பவர்கள் விநாயகர் போற்றி, அஷ்டோத்திரம், அகவல், கவசப் பாடல்களை பாட வேண்டும். மாலையில் வானில் தெரியும் சந்திரனை தரிசித்து விட்டு விநாயகரை வழிபட வேண்டும். உப்பு, புளி, காரம் அதிகம் சேர்க்காத உணவைச் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், மஞ்சள், தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்கள், கருங்காலி மர விநாயகர் அல்லது ஸ்படிக விநாயகரை வைத்து வழிபடலாம் .
அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, பூக்கள், தூபக் குச்சிகள், சாம்பிராணி மற்றும் விளக்குகளை ஏற்றி வைத்து பூஜை செய்யலாம்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional