< Back
ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 8-ம் தேதி மகா சிவராத்திரி விழா

தினத்தந்தி
|
1 March 2024 9:49 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 8-ந் தேதி இரவு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அம்மன், சுவாமிக்கு நான்கு கால அபிஷேகம், அலங்கார பூஜைகள் விடிய, விடிய நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த ஆண்டு சிவராத்திரி விழா 5 சிவன் கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன், சுவாமி சன்னதிகளில் மகா சிவராத்திரி சிறப்பு அபிேஷக வழிபாடுகள் நடைபெறும். அதே நேரத்தில் வடக்கு ஆடி வீதிகளில் மாலை 6 மணி முதல் மறுநாள் (9-ந் தேதி) காலை 6 மணி வரை விடிய, விடிய ஆன்மிக இசை மற்றும் நடன இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலில் மாலை 6 மணிக்கு மங்கள வாத்தியம் மீனாட்சி அம்மன் கோவில் நாதஸ்வரக் குழுவினரால் நடத்தப்படுகிறது. அதை தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு திருமுறை விண்ணப்பம், 6.30 மணிக்கு சிவ வாத்தியம் இசைக்கப்படுகிறது. 7 மணி முதல் 8 மணி வரை பரதநாட்டியம் நிகழ்ச்சியும், 8 மணிக்கு தெளிதமிழ் தனிஉரையும் நடக்கிறது.

இரவு 8.20 மணி முதல் 10 மணி வரை பேராசிரியர் ராமச்சந்திரன் குழுவினரின் ஆன்மிக பட்டிமன்றமும், 10 மணி முதல் 12 மணி வரை ஊர்மிளா சத்தியநாராயணனின் நாட்டிய நாடகமும், நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை வீரமணிராஜூ குழுவினரின் இசைசொற்பொழிவும், அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை ஸ்ருதிலயா குழுவினரின் நாதசங்கமமும், 4 மணி முதல் 6 மணி வரை கோவிந்தராஜ் குழுவினரின் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்