< Back
ஆன்மிகம்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஆன்மிகம்

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
22 April 2024 6:59 AM IST

பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

மதுரை,

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 19-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானை அவர் போருக்கு அழைத்த நிகழ்வை கூறும் 'திக்கு விஜயம்' நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

தேரோட்டம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர்-பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

பெரிய தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னால் செல்கிறது. தொடர்ந்து, முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கின்றனர். அசைந்து வரும் தேரை காண்பதற்காக சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா சிவசிவா முழக்கத்துடனும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்துள்ளனர். பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துவருகின்றனர். தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர்

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு நேற்று மாலை புறப்பட்டார். வழிநெடுக உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய அவருக்கு, இன்று காலை மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. நாளை (செவ்வாய்கிழமை) அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார். இதைக்காண, தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் செய்திகள்