< Back
ஆன்மிகம்
அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்
ஆன்மிகம்

அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்

தினத்தந்தி
|
14 Jun 2022 5:52 PM IST

“ உன் முழு இருதயம், முழு ஆன்மா, முழு உள்ளத்தோடு கடவுளுக்கு அன்பு செய். உன் மீது நீ அன்பு செய்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய். ” என்றார் இயேசு.

ஒரு முறை திருச்சட்ட நூல்களைக் கரைத்துக் குடித்திருந்த ஒருவர் இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

"திருச்சட்ட நூலிலேயே தலை சிறந்த கட்டளை எது?".

பழைய ஏற்பாட்டைப் புரட்டிப் பார்த்தால் 613 கட்டளைகள் உண்டு. யூதர்களைப் பொறுத்தவரை இவை எல்லாமே மிக முக்கியமானவை, கடைபிடிக்கப்பட வேண்டியவை.

இயேசு என்ன சொல்லப் போகிறார்?, அவர் ஒன்றைச் சொன்னால் இன்னொன்றைச் சொல்லி அவரை மடக்கலாம் என அவர்கள் காத்திருந்தார்கள்.

இயேசு அமைதியாய்ச் சொன்னார்: "திருச்சட்டத்திலுள்ள அத்தனை கட்டளைகளையும் இரண்டே இரண்டு கட்டளைகளில் அடக்கி விடலாம். உன் முழு இருதயம், முழு ஆன்மா, முழு உள்ளத்தோடு கடவுளுக்கு அன்பு செய். உன் மீது நீ அன்பு செய்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய். எல்லா கட்டளைகளுக்கும் அடிப்படை இவை தான்" என்றார்.

கிறிஸ்தவத்தின் தலையாய கட்டளைகள் இவை தான். "கடவுளை நேசி, மனிதனை நேசி".

இன்னொரு இடத்தில் இயேசு சொல்வார்: 'கண்ணில் காணும் மனிதனை அன்பு செய்யாமல், கண்ணில் காணாத கடவுளை அன்பு செய்யவே முடியாது' என்று.

இதில் மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால், 'மனிதனை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்வதற்கு சமம்' என்று சொன்ன இயேசு, 'கடவுளை அன்பு செய்வது மனிதனை அன்பு செய்வது போல', என சொல்லவில்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாய்ச் சிந்தித்தால் உண்மையான அன்பு உள்ளத்தில் நிறைந்திருந்தால், நமது செயல்கள் எல்லாமே அன்பின் வெளிப்பாடாய் அமைந்திருந்தால் அதுவே மிகச் சிறந்த கிறிஸ்தவ வாழ்வு என்கிறார் இயேசு.

நற்செய்தியை அறிவிப்பதையோ, ஆராதனைகளை நடத்துவதையோ, போதனைகள் செய்வதையோ, ஏன் விசுவாசத்தையோ கூட இயேசு முன்னிலைப்படுத்தவில்லை. அன்பை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார்.

அன்புக்கு முன்னால் சாதீய, இன வேறுபாடுகள் அடிபட்டுப் போகின்றன. மத, திருச்சபை நிகழ்வுகள் பின் வரிசைக்குச் சென்று விடுகின்றன. என்பதை எல்லாம் 'யார் அயலான்' எனும் கதையில் இயேசு விளக்குகிறார்.

எல்லாம் இருந்தாலும், அன்பு இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. விண்ணகத்திற்கான நுழைவுச் சீட்டும் அன்பின் செயல்களைச் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை இயேசு மிக ஆழமாகப் பதிவு செய்கிறார்.

கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் அன்பின் செயல்களைச் செய்து, அன்பின் வடிவமாய் மாறும்போது தான் நாம் இறை சாயலை அணிந்து கொள்கிறோம். நமது சொல், செயல், சிந்தனை எல்லாமே அன்பை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்.

கட்டளையைப் புரிந்து கொள்வோம். அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்.

மேலும் செய்திகள்