< Back
ஆன்மிகம்
நலம் தரும் நடராஜப் பெருமான்
ஆன்மிகம்

நலம் தரும் நடராஜப் பெருமான்

தினத்தந்தி
|
30 Jun 2023 7:25 PM IST

சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று, நடராஜர் வடிவம். சிவலிங்கத்திற்கு அடுத்தபடியாக நடராஜர் வழிபாடு அகிலம் முழுவதும் இருந்து வருகிறது. நடராஜர் என்றாலே, சிதம்பரம் நடராஜர் கோவில்தான் நினைவுக்கு வரும். இந்தப் பகுதியில் தில்லை எனப்படும் சிதம்பரம் ஆலயத்தின் சில சிறப்புகள் பற்றியும், நடராஜரின் சிறப்புகள் பற்றியும் பார்க்கலாம்.

நடராஜரால் இயங்கும் உலகம்

இந்த உலக இயக்கத்தின் தத்துவமாக நடராஜரின் வடிவம் கருதப்படுகிறது. இதை விஞ்ஞானிகள் உணர்ந்ததன் காரணமாகத்தான், ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் முன்பாக மிகப்பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து தொழில்களை நடனத்தின் போது நடத்துகிறார். இதனை 'பஞ்ச கிருத்தியம்' என்கிறார்கள். சதாசர்வ காலமும் இடைவிடாமல் ஆடிக்கொண்டே உலகத்தை இயக்குகிறார். நடராஜர் அசைந்தாடுவதால்தான், அணு முதல் ஆகாயம் வரை அனைத்தும் அசைந்து இயங்குவதாக சொல்லப்படுகிறது.

தைப்பூசத்தில் தாிசனம்

சிதம்பரத்தில் உள்ள சிவாலயம், பொதுவாக நடராஜர் கோவில் என்று அழைக்கப்பட்டாலும், இந்த ஆலயத்தின் மூலவராக அருள்பாலிப்பவர் லிங்க வடிவில் உள்ள ஆதிமூலநாதர் தான். சிதம்பரம் ஆலயத்திற்கு நடராஜர் வழிபாடு வந்தது பின்னாளில்தான். அதாவது சிவபெருமானின் நடனத்தை, பூலோக மக்களும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும், சிதம்பரம் ஆதிமூலநாதரை நோக்கி கடுமையான தவம் இருந்தனர். அவர்களின் வேண்டுதலை நிறை வேற்றும் பொருட்டு, ஒரு தைப்பூச நாளின் உச்சிப் பொழுதில், 'திரிசகஸ்ர முனிவர்கள்' என்னும் மூவாயிரம் அந்தணர்களுடன் எழுந்தருளி, தனது நடன தரிசனத்தை இறைவன் காட்டி அருளினார்.

தமிழை ரசிக்கும் நடராஜர்

சிவபெருமானின் இருப்பிடமாக கருதப்படும் கயிலாய மலையானது, வடக்கு நோக்கியபடி இருந்தாலும், அவர் நடராஜராக நடனத்தை ஆடும் போது தெற்கு திசை நோக்கியே ஆடுகிறார். இதற்கான காரணம் பற்றி தன்னுடைய திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் அளிக்கும் விளக் கம், தமிழ் மீதான ஈசனின் பற்றை எடுத்துரைப்பதாக இருக்கிறது.

அதாவது நடனம் புரியும் போது கை, கால்களை தொடர்ந்து அசைப்பதால், உடலில் களைப்பு உண்டாகும். அப்படி ஏற்படும் களைப்பானது, பொதிகை மலையின் உச்சியில் இருந்து சந்தன மரங்களை தழுவியபடி வீசும் தென்றல், முகத்தில் படுவதால் களைப்பு நீங்கி புத்துணர்வு ஏற்படும். அதுமட்டுமின்றி, தமிழ் மொழியின் இனிமையைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும், சிவன் தெற்கு நோக்கி நின்று நடனம் புரிவதாக பரஞ்சோதி முனிவர் எடுத்துரைக்கிறார்.

சொர்ணம் வழங்கும் பைரவர்

முன் காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை செய்யும் தில்லைவாழ் அந்தணர்களான தீட்சிதர்களுக்கு ஊதியம் கொடுக்கும் வழக்கம் இல்லை. இரவு நேர பூஜை முடிந்து ஆலய நடை பூட்டப்படுவதற்கு முன்பு, இங்குள்ள சொர்ண காலபைரவர் சன்னிதியில் ஒரு செப்பு தகட்டை வைத்து விட்டுச் செல்வார்கள். மறுநாள் காலையில் அந்த செப்புத் தகடு, தங்கத் தகடாக மாறிவிடுமாம். முன்தினம் பூஜை செய்தவர்கள், அதையே தங்களுக்கான ஊதியமாக எடுத்துக் கொள்வார்களாம். இவ்வாலய சொர்ண கால பைரவரை, ஞாயிற்றுக்கிழமை வரும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) வழிபாடு செய்தால், தங்கம் வாங்கும் யோகம் வாய்க்கும்.

சிதம்பர ரகசியம்

சிதம்பரம் கோவிலில் உள்ள நடராஜரின் சன்னிதிக்கு வலதுபுறமாக சிறிய வாசல் ஒன்று காணப்படும். அந்த வாசல் திரையால் மூடப்பட்டிருக்கும். இதனுள் தங்கத்தால் ஆன வில்வ மாலை தொங்க விட்டிருப்பார்கள். பூஜையின்போது அந்த திரை விலக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். அப்போது குனிந்து பார்த்தால், அந்த வாசல் வழியாக ஆகாயம்தான் தென்படும். இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவர், அவருக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது என்பதை உணர்த்துவதே இந்த 'சிதம்பர ரகசியம்'. பஞ்ச பூதத் தலங்களில், சிதம்பரம் நடராஜர் கோவில் 'ஆகாயத் தல'மாக போற்றப்படுகிறது.

அரங்கேற்ற மண்டபம்

ஆதியும் அந்தமும் இல்லாத ஒரே பரம்பொருள், சிவபெருமான். ஆனால் படைப்புக் கடவுளான பிரம்மனுக்கு ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அழிவுண்டு. ஊழிக் காலம் எனப்படும் அழிவு நாளில், பிரம்மனும், உலக உயிர்கள் அனைத்தும் அழிக்கப்படும். பின்னர் மீண்டும் பிரம்மன் தோற்றுவிக்கப்படுவார். அதைத் தொடர்ந்து அவர் உலக உயிர்களை உருவாக்கும் பணியைத் தொடங்குவார். ஒவ்வொரு யுகத்தின்

முடிவிலும் அழிவை சந்தித்த பிரம்மனின் மண்டை ஓடுகளை சிவன் தன் கழுத்தில் மாலையாக தொங்கவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது தலையில் சூடிய சந்திரனில் இருந்து வழியும் அமிர்தம், அந்த கபாலத்தின் மீது பட்டதும் அது உயிர்பெற்றுவிடுமாம். அந்த தலைகள் இசையுடன் பாடி நடராஜரை வழிபடும். அந்த இசைக்கேற்ப நடராஜர் நடனம் புரிவார். இப்படி பிரம்ம கபாலங்களில் இருந்து இசையும், நடராஜரிடம் இருந்து நடன அசைவுகளும் உண்டாயின. இதன் அடிப்படையில் இசை, நடனம் கற்பவர்கள், பொன்னம்பலம் என்னும் சிதம்பரம் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்துகின்றனர்.

யாகத்தில் வெளிப்பட்ட ஈசன்

ஒரு முறை தனது இருப்பிடமான சத்தியலோகத்தில், யாகம் ஒன்றை நடத்த முன்வந்தார், பிரம்மதேவன். அந்த யாகத்தில் பங்கேற்பதற்காக தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேருக்கு பிரம்மன் அழைப்புவிடுத்தார். ஆனால் அந்த அந்தணா்கள், 'தில்லையில் இருந்து நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட, யாகத்தால் என்ன பலன் கிடைக்கப்போகிறது' என்று நினைத்து, யாகத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர். அப்போது அங்கு தோன்றிய நடராஜர், 'பிரம்மனின் யாகத்தில் கலந்துகொள்ளும்படியும், யாகத்தின் முடிவில் அங்கு தான் காட்சியளிப்பதாகவும்' அந்தணர்களுக்கு உறுதியளித்தார். அதன்படி யாகத்தின் முடிவில் யாகத்தில் இருந்து நடராஜர் வெளிப்பட்டார். அவருக்கு 'ரத்தினசபாபதி' என்று பெயர். இவரது சிலை, சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழ் உள்ளது. இந்த ரத்தினசபாபதிக்கு தினமும் காலை 10 மணி முதல் 11 மணிக்குள், சிறப்பு பூஜைகள் நடந்தேறும். இவரது சிலையில் முன்புறம் மட்டுமின்றி, பின்புறமும் தீபாராதனை காட்டுவார்கள்.

மூன்று வடிவத்தில் இறைவன்

உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று வடிவங்களைக் கொண்டவர், சிவபெருமான். இந்த மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்பாலிக்கும் ஒரே தலமாகவும், பழமையான தலமாகவும் சிதம்பரம் நடராஜர் ஆலயம் இருக்கிறது. இங்கு மூலவராக உள்ள ஆதிமூலநாதர் லிங்க வடிவில் அருவுருவமாக காட்சியளிக்கிறார். அதேபோல் நடராஜர் உருவத்தின் வெளிப்பாடாகவும், சிதம்பர ரகசியம் என்னும் வெட்ட வெளியில் உருவமற்ற அருவ நிலையிலும் இருந்து பக்தர்களுக்கு ஈசன் அருள்புரிந்து வருகிறார்.

நாழிகை மணி

பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் மணி இருக்கும். இறைவனுக்கு பூஜைகள் நடைபெறும் வேளையில் இந்த மணி ஒலிக்கப்படும். இந்த மணியில் இருந்து வெளிப்படும் சத்தமானது, 'ஓம்' என்ற பிரணவத்தின் சத்தத்தை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும் ஒரு மணி இருக்கிறது. இந்த மணியானது, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஒலிக்கப்படும். 24 மணி நேரமும் இந்த மணி ஒலிக்கப்படுகிறது. நேரத்தை குறிக்கும் விதமாக ஒலிக்கப்படுவதால் இதற்கு 'நாழிகை மணி' என்று பெயர். திருவாரூர் தியாகராஜர் கோவில் தவிர, மற்ற அனைத்து கோவில்களில் உள்ள சிவலிங்கங்களும், சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையின்போது, இங்கே ஒடுங்குவதாக ஐதீகம். இரவு 10 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்த்தஜாம பூஜை நடத்தப்படும். நாழிகை மணி ஒலித்தபிறகுதான், இந்த பூஜையை நடத்துவார்கள்.

மேலும் செய்திகள்