< Back
ஆன்மிகம்
முருகப்பெருமான் வழிபட்ட திருப்பந்துறை ஈசன்...!
ஆன்மிகம்

முருகப்பெருமான் வழிபட்ட திருப்பந்துறை ஈசன்...!

தினத்தந்தி
|
4 Aug 2023 1:57 PM IST

பிரணவத்தின் (ஓம்) சொரூபமாக விளங்கும் முருகப்பெருமான், எல்லாம் அறிந்த அந்த சிவபெருமானுக்கே பிரணவத்தின் உட்பொருள் உரைத்த தலம், திருவேரகம் என்னும் சுவாமிமலை. சகல செயல்களுக்கும் காரணமாகத் திகழும் பரப்பிரம்மமான பரமேஸ்வரன், தனது தீராத திருவிளையாட்டின் பொருட்டு பிரணவத்தின் உட்பொருளை செந்தில்நாதனிடம் இருந்து செவிமடுத்து கேட்டுக் கொண்டார். தந்தைக்கு உபதேசம் செய்ததோடு, பிரணவப்பொருள் அறியாத பிரம்மனையும் சிறையில் அடைத்தார், சிங்காரவேலன்.

கோவில் தோற்றம்

மூத்தோர்களை நிந்தித்ததன் விளைவு, மூகத்துவம் (ஊமை) அடைந்தார் முருகப்பெருமான். இதனால் அவர் மூன்று உலகங்களையும் மன வருத்தத்துடன் சுற்றி வந்தார். இதையறிந்த முருகப்பெருமானின் மாமனான மகாவிஷ்ணு, "முருகா... குற்றங்களை எல்லாம் மன்னித்து அருளுபவர் மகாதேவர் மட்டுமே. எனவே மண்ணுலகில் மகேசனை நினைத்து வழிபாடு செய்து வா" என்று அறிவுரை வழங்கினார். அதன்படி காவிரியின் கிளை நதியான 'அரிசொல் ஆறு' எனப்படும் அரசலாற்றங்கரையின் தென்புறம், வன்னி மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்றை நிறுவி முறைப்படி சிவபெருமானை பூஜை செய்து வந்தார், முருகப்பெருமான். இந்த வழிபாட்டிற்குப் பின்னர், பரமேஸ்வரரின் பெருங்கருணையினால் வாய் பேசும் திறன் பெற்றார் வேலாயுதன். அதோடு மன சஞ்சலம் நீங்கி, மன மகிழ்ச்சி கொண்டார்.

சிவானந்தேஸ்வரா்

இதன் பொருட்டு இன்றும் இங்கே வந்து வழிபடுவோர் பேச்சாற்றலை மீண்டும் பெறுகின்றனர். திக்குவாய் உள்ளவர்கள் திருந்தப் பேசுகின்றனர். முருகப்பெருமானைத் தவிர பார்வதி மற்றும் பிரம்மாவும் இத்தல சிவபெருமானை வழிபாடு செய்திருக்கிறார்கள். அவதுர்ம மாமுனிகள் தம் தொழுநோய் நிவர்த்திக்காக இத்தல மங்கல தீர்த்தத்தில் நீராடி, ஈசனை வணங்கி, நோய் நீங்கப் பெற்றதோடு, 'சின்மயானந்த வடிவம்' அடைந்ததால், இத்தல இறைவனுக்கு 'சின்மயானந்தமூர்த்தி' என்கிற பெயர் உண்டானது. தல தீர்த்தமான மங்கள தீர்த்தமும், 'சின்மயானந்த தீர்த்தம்' என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

கந்தனின் மறுவடிவாக கருதப்படும் திருஞானசம்பந்தர், இத்தலத்தின் மீது ஒரு பதிகம் பாடி சிவபெருமானைப் போற்றியுள்ளார். முன்பு 'பேணுப் பெருந்துறை' என்று அழைக்கப்பட்ட இந்தத் திருத்தலம், தற்போது 'திருப்பந்துறை' என்ற பெயரில் உள்ளது. இந்த திருத்தல ஆலயம், காவிரி தென்கரையின் 64-வது தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. வாழை மரங்களும், தென்னந்தோப்புகளும், நெற்கழனிகளும் சூழ்ந்த அமைதியான சிறு கிராமம் திருப்பந்துறை. இந்த ஊர் சாலை ஓரமாகவே கிழக்கு நோக்கி எழிலாக அமைந்திருக்கிறது, இந்த ஆலயம்.

மங்களாம்பிகை

ஆலயத்தின் முன்பாக அல்லியும், தாமரையும் பூத்துக் குலுங்கும் மங்கள தீர்த்தம் உள்ளது. தீர்த்தக்கரை மீது குகவிநாயகர், சாட்சி விநாயகர் என இரட்டைப் பிள்ளையார்கள் ஒரே சன் னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனா். சிறிய நுழைவு வாசல் வழியாக ஆலயத்திற்குள் சென்றால், அழகிய மூன்று நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. அதையும் கடந்து செல்ல, ஒரே பிரகாரத்தினை கொண்டு திகழ்கிறது, சுவாமி மற்றும் அம்பாளின் சன்னிதிகள். முதலில் முன் மண்டபம் இருக்கிறது. இங்கு அம்பாள் சன்னிதி தென் திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்பிகையின் திருநாமம் 'மங்காளம்பிகை' என்பதாகும். 'மலையரசியம்மை' என்றும் அழைக்கிறார்கள்.

அம்பாளை வணங்கி விட்டு வெளியே வந்து திரும்பினால், தண்டபாணி சுவாமி வடக்கு முகமாக நின்ற நிலையில் குடுமியுடன் சின் முத்திரை காட்டி, கண்கள் மூடிய நிலையில் காட்சி தருகிறார். இத்தலத்தில் சிவபெருமான் மூலவராக இருந்தாலும், இந்த தண்டபாணி சுவாமியே பிரதான மூர்த்தியாக இருக்கிறாா். இவர் தவக்கோலத்தில் சோமாஸ்கந்த அமைப்பில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதியை அடுத்து அமைந்திருக்கிறது, மூலவரான சிவானந்தேஸ்வரர் சன்னிதி. இங்கே கருவறைக்குள் சுயம்பு லிங்கமாக அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறார், சிவபெருமான். இவரை 'பிரணவேஸ்வரா்' என்றும், 'சின்மயானந்தமூர்த்தி' என்றும் அழைக்கின்றனர்.

தண்டபாணி சுவாமி

பொதுவாக பெருமைமிகு சில ஆலயங்களில், மூலவர் இருக்கும் சன்னிதிக்குள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில்தான் சூரியனின் கதிர்கள் விழும். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் சிவலிங்கத்தின் மீது தினந்தோறும் சூரியனின் கதிர்கள் படர்வது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இந்த ஈசனை வணங்கி விட்டு ஆலய வலம் வரும் போது, முதலில் வடக்கு நோக்கி இருக்கும் கணபதி, சமயக்குரவர்கள் நால்வர், அரசியோடு இருக்கும் கரிகால்சோழன் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. தொடர்ந்து கன்னிமூலையில் தல கணபதியும், பின் முருகப்பெருமானும், கஜலட்சுமியும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள துர்க்கை அம்மன் 'விஷ்ணு துர்க்கை'யாக காட்சி தருகிறார். கிழக்கு சுற்றில் நவக்கிரகங்கள் உள்ளன.

ஆரம்ப காலத்தில் செங்கல் தளியாக இருந்த இந்த ஆலயத்தை, கரிகால்சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கற்றளியாக மாற்றியிருக்கிறார். இந்த ஆலயம் பழங்காலத்தில் 'திருநறையூர் நாட்டு கிராமமான பேணுப்பெருந்துறை' என்றும், இத்தல ஈசன் 'பேணுப் பெருந்துறை மகாதேவர்' என்றும் அழைக்கப்பட்டதற்கான கல்வெட்டு சான்றுகள் காணப்படுகின்றன. அதோடு இவ்வாலயத்தில் ராஜராஜ சோழன் மற்றும் வீரபாண்டியன் காலத்து சாசன கல்வெட்டுகளும் இருக்கின்றன.

இவ்வாலயத்தில் அனைத்து விதமான சிவ வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. குறிப்பாக சித்திரை மாத பரணி நட்சத்திரத்தில், பிட்சாடனருக்கு அமுதுபடையல் போடும் நிகழ்வு சிறப்பாக நடக்கிறது. இவ்வாலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இவ்வாலய பிரதான மூர்த்தி தண்டபாணி சுவாமிக்கு தேனாபிஷேகம் செய்து, அந்த அபிஷேகத் தேனை தொடர்ந்து 45 நாட்கள் பருகி வந்தால், திக்குவாய், பேச்சுக் குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை. வியாழக்கிழமை அன்று, இத்தல தீர்த்தத்தில் நீராடி தல கணபதி, சுவாமி, அம்பாள், தண்டபாணி ஆகியோரை வழிபாடு செய்தால், தோல் வியாதி உள்பட பல்வேறு நோய்கள் அகலும்.

தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது, நாச்சியார்கோவில். இங்கிருந்து பூதோட்டம் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, திருப்பந்துறை.


- பழங்காமூர் மோ.கணேஷ்

மேலும் செய்திகள்