தீய நண்பர்களை விட தனிமையே சுகமானது
|நல்ல நண்பர்கள் நம் பக்கத்தில் இருந்தால், தீய பழக்க வழக்கங்களை கைவிடும்படி அறிவுறுத்துவார்கள். நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள்.
நட்பு என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய உறவாக நட்பு அமைந்து விடுகிறது. ரத்த பந்தமின்றி, சாதி மத பேதமின்றி, இன நிற மொழி வேறுபாடு இன்றி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உதிக்கும் உன்னத பிணைப்பு நட்பு. அந்த நட்பை நல்ல நட்பாக நாம் தேர்வு செய்திட வேண்டும். நல்ல நண்பர்கள் நம் பக்கத்தில் இருந்தால், அவர்கள் நமக்கு நல்ல பாதுகாவலர்களாக இருப்பார்கள்; நல்லதை ஏவுவார்கள்; தீயதை தடுப்பார்கள். நல்லொழுக்கத்தை கற்றுத் தருவார்கள்; தீய பழக்க வழக்கங்களை கைவிடும்படி அறிவுறுத்துவார்கள். நன்மைக்கு உதவி புரிவார்கள். தீமைக்கும், அநியாயத்திற்கும் எதிராக நிற்பார்கள். நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள்.
தீய நட்பை நாம் தேர்வு செய்தால், தீயவர்களின் கெட்ட பழக்க வழக்கம் நம் மீதும் தொற்றிவிடும். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்: 'ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'இறைவழியில் தம் உடலாலும், பொருளாலும் போராடுகிறவர். (அடுத்துச் சிறந்தவர்) மலைக் கணவாய்களில் ஒன்றில் தம் இறைவனை வணங்கிக் கொண்டு மக்களுக்குத் தம்மால் தீங்கு நேராமல் தவிர்த்து வாழ்கிறவர்' என்று பதில் கூறினார்கள்.' (நூல்:புகாரி)
நாம் வசிக்கும் இடத்தில் நம்மைச்சுற்றி உள்ளவர்கள் தீய பழக்க வழக்கங்களில் மூழ்கி இருக்கும் போது, அந்த தீய பழக்கம் நம்மிடமும் தொற்றிக்கொள்ளக்கூடாது என்று நினைத்து, அந்த இடத்தை விட்டு அகன்று மலைப்பகுதியில் தனிமையான வாழ்வது சிறந்தது என்று இந்த நபி மொழி விளக்குகிறது.
'மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு இறைவிசுவாசியான மனிதரின் செல்வங்களிலேயே ஆடு தான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களிலிருந்து தம் மார்க்க (விசுவாச)த்தை காப்பாற்றிக்கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு அவர் மலை உச்சிக்கும், மழைத்துளிகள் விழும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் சென்று வாழ்வார் என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்:புகாரி) 'நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா' என்கிறார் தத்துவமேதை அரிஸ்டாட்டில். இந்த தத்துவத்திற்கு ஏற்ப தீய நண்பரின் ஆன்மா செய்வதை அவரது நண்பரும் செய்வார்.
'உன் நண்பனைக் காட்டு நீ யாரென்று சொல்கிறேன்' என்ற பழமொழியைப் போல ஒருவனை அவனது நண்பனை வைத்து எடை போட்டு மதிப்பிடலாம். நட்பு என்பது நிழல் போன்று கூடவே வரும். தீய நண்பனின் தீய பழக்கங்கள் (மதுஅருந்துதல், புகை பிடித்தல், பொய் கூறுதல், திருடுதல், மோசடி செய்தல், கொள்ளையடித்தல், கொலை செய்தல், பாலியல் ரீதியிலான குற்றங்களை புரிதல், அபகரித்தல் போன்ற அனைத்து அயோக்கியத்தனமும்) அவனுடன் பழகுபவனிடமும் குடி கொண்டுவிடும்; தொற்றிக்கொள்ளும் ஆபத்தும் உள்ளது.
தீய நண்பன் தீமையின் தூதுவன் ஆவான். நன்மைக்கும், நல்லொழுக்கத்திற்கும் எதிரி ஆவான். தீய நட்பு என்பது கொடிய விஷத்தைப் போன்றது. அது அனைத்தையும் பாழாக்கிவிடும். தீய நட்பு என்பது புற்றுநோயைப் போன்றது. அது தொற்றிக் கொண்டால், நற்சிந்தனைகளையும், நல்லொழுக்க விழுமியங்களையும் ஒன்றுமே இல்லாமல் அரித்துவிடும். தீய நட்பு என்பது நல்லவற்றை தகர்க்கும் சாதனமாகும். 'கூடா நட்புக் கேடாய் முடியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவனை துன்பத்தில் தள்ளிவிடும்.
'எனக்கு வந்த கேடே! என்னை வழி கெடுத்த ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா?' என்று அநியாயக்காரன் புலம்புவான்' என்று திருக்குர்ஆன் (25:28) எச்சரிக்கிறது. 'மனிதன் யார் மீது அன்பு கொண்டானோ அவனுடன் தான் அவன் இருப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்உத் (ரலி), நூல்:புகாரி) தீயவருடன் நட்பு கொண்டவன் தீயவர்களுடன் நரகில் இருப்பான். 'உங்களை நரகத்தில் நுழைய வைத்தது எது?' என்று சொர்க்கத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகளிடம் விசாரிப்பார்கள். அதற்கு அவர்கள் 'தொழுபவர்களில் நாங்கள் இருக்கவில்லை. ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. வீணானவற்றில் மூழ்கிக்கிடந்தோருடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்' எனக் கூறுவார்கள்'. (திருக்குர்ஆன் 74:40-45)
தீய நண்பன் கெட்டவனை விட மோசமானவன். அவன் மறைமுக எதிரி. தீயநட்பு வாழ வைக்காது; வீழ வைக்கும். இதனால் தீய நண்பர்களை விடத் தனிமையே சுகமானது.