ஈரோடு
காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளநட்டாற்றீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா;திரளான பக்தர்கள் பரிசலில் வந்து தரிசனம்
|காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் பரிசலில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மொடக்குறிச்சி
காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவில் திரளான பக்தர்கள் பரிசலில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
நட்டாற்றீஸ்வரர் கோவில்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவில் நட்டாற்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து, காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை உள்ள தூரத்தில் நடுமையத்தில் இந்த கோவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இங்குள்ள பாறையில் அகத்திய மாமுனிவர் கடும் தவம் செய்து கண்விழித்தது சித்திரை முதல்நாள் என்றும், அவர் தன்னுடைய கையாலேயே காவிரி ஆற்று மணலை கொண்டு செய்த லிங்கம்தான் கருவறையில் உள்ளது என்றும் தலவரலாறு கூறுகிறது.
சித்திரை திருவிழா
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டான சித்திரை முதல்நாள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு 108 சங்கு பூஜை நடைபெற்றது.
நேற்று காலை நட்டாற்றீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து வரிசையில் காத்திருந்து சாமியை வழிபட்டனர்.
கம்பங்கூழ் பிரசாதம்
நடு ஆற்றில் கோவில் அமைந்துள்ளதால் ஈரோடு மாவட்டம் வழியாக காங்கேயம்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் பாலம் வழியாக பக்தர்கள் எளிதாக கோவிலுக்கு சென்றார்கள். ஆனால் மறுகரையில் உள்ள நாமக்கல் மாவட்ட பகுதியில் இருந்து வருவதற்கு பாலம் இல்லை. அதனால் நாமக்கல் மாவட்ட பக்தர்கள் பட்லூரில் இருந்து பரிசல் மூலம் கோவிலுக்கு வந்தனர். இதற்காக 15-க்கும் மேற்பட்ட பரிசல்கள் இயக்கப்பட்டன.
நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழாவில் பிரசாதமாக கம்பங்கூழ் வழங்கப்படும். இதற்காக கோவிலின் அருகே தனியாக இடம் அமைத்து சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்களுக்கு கோடை வெயிலுக்கு இதமாக கம்பங்கூழ் வழங்கப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது. நீர்மோர் பந்தல்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோடு மற்றும் கொடுமுடியில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.