பேசும் முன்பு கவனம் வேண்டும்
|ஒரு தகவலின் உண்மைத்தன்மையை அறியாமல், உணராமல், அதை பரப்புவதால் ஏற்படும் விளைவுகளுக்கு நாமும் காரணமாகி விடுகிறோம்.
எந்த ஒரு தகவலும் அதிவேகமாக பரவும் 5 ஜி டிஜிட்டல் உலகமாக இன்றைய தகவல் தொடர்பு வசதிகள் அமைந்துள்ளன. உண்மையோ, பொய்யோ, கற்பனையோ... எதுவாக இருந்தாலும் தாங்கள் கேட்ட செய்திகளை, வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்ட தகவல்களை உடனே மற்றவர்களுக்கு பரப்பும் வழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது.
ஒரு செய்தி, படம், தகவல், வீடியோ காட்சி போன்றவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை உணராமல், அதை பிறருக்கு அனுப்புவது சிறந்த பண்பு அல்ல. இது, எந்த ஒரு சமூக பொறுப்பும் இன்றி செயல்படுவதற்கு ஒப்பாகும். காதில் கேட்ட தகவல்களை, மொபைல் போனில் வந்த தகவல்களை, தங்களது முகநூலில் படித்த தகவல்களை உறுதி செய்யாமல், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் பரப்புவது இப்போது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது.
ஒரு தகவலின் உண்மைத்தன்மையை அறியாமல், உணராமல், அதை பரப்புவதால் ஏற்படும் விளைவுகளுக்கு நாமும் காரணமாகி விடுகிறோம். யாரோ ஒருவர் அனுப்பிய செய்தி தானே என்று சாக்குப்போக்கு சொல்லி தப்பிக்க முடியாது.
இஸ்லாம் இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை வன்மையாக கண்டிக்கின்றது. உண்மைத்தன்மையை ஆராயாமல் எதையும் பேசக்கூடாது, அவதூறுகளை பரப்பக்கூடாது என்று இஸ்லாம் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற செயல்கள் மூலம், அந்த செயல்களை செய்பவர்களின் மறுமை வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் எச்சரிக்கிறது.
இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்கள், பேசும் பேச்சுக்கள், எழுதும் எழுத்துக்கள், பரப்பும் தகவல்கள், பார்க்கும் பார்வைகள் அனைத்தும் இறைவனால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த செயல்களுக்கு மறுமையில் இறைவனின் முன்பு நம்மிடம் கேள்வி கணக்கு கேட்கப்படும். அப்போது அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.
திருக்குர்ஆன் (17:36) இதுபற்றி குறிப்பிடும் போது, "(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே, அவற்றின் செயலைப்பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
மிகத்தெளிவான விளக்கம் தரும் இந்த திருக்குர்ஆன் வசனத்தை இன்றைய சமுதாயம் மனதில் எப்போதும் பதிய வைத்துக்கொள்வது அவசியம்.
"நீங்கள் அறியாத எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடர வேண்டாம்" என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் மூலம் ஏக இறைவன் அல்லாஹ் கூறியுள்ளான். இது எந்தக்காலத்திலும், நபிகளாரின் வழித்தோன்றல்களான நமக்கு பொருந்தக்கூடியது.
அதுமட்டுமல்ல, நமது உடல் உறுப்புகளும், உள்ளமும் செய்யும் ஒவ்வொரு செயல்களும் இறைவனால் கண்காணிக்கப்படுகின்றது. அவை செய்யும் நன்மை-தீமைகளுக்கு நாம் தான் பொறுப்புதாரியாக இருக்கிறோம். எனவே இதுகுறித்து மறுமைநாளில் இறைவனின் சன்னிதியில் விசாரணை நடைபெறும் போது அளிக்கப்படும் தீர்ப்புக்கு ஏற்ப, நமது மறுமை வாழ்வு அமையும் என்பதையும் இந்த திருக்குர்ஆன் வசனம் எடுத்துக்காட்டுகிறது.
மனிதன் மனதில் நினைக்கும் ரகசிய எண்ணங்களையும் அறிந்து கொள்ளும் சக்தி படைத்தவன் ஏக இறைவன் அல்லாஹ். இதுகுறித்து திருக்குர்ஆன் (20:7) இவ்வாறு கூறுகிறது:
"(நபியே!) நீங்கள் மெதுவாகவோ, சப்தமிட்டோ கூறினால் இரண்டும் அவனுக்கு (அல்லாஹ்வுக்கு) சமம்தான். ஏனென்றால், நிச்சயமாக அவன் ரகசியத்தையும் அறிகிறான்; அதைவிட ரகசியமாக மனதில் இருப்பதையும் அறிகிறான்".
இறைவன் மிகப்பெரியவன் என்பதை இதன் மூலம் நாம் அறியலாம். எனவே நமது எண்ணங்களையும், செயல்களையும், பேசும் பேச்சையும் நேர்மையான வழியில் அமைத்துக்கொண்டு வாழ்வோம், இறையருளைப்பெறுவோம்.