< Back
ஆன்மிகம்
ராம நாமத்தின் மகிமை
ஆன்மிகம்

ராம நாமத்தின் மகிமை

தினத்தந்தி
|
4 Aug 2022 6:36 PM IST

‘ராம’ நாமத்தை சொன்னால் அந்த இடத்திற்கு அனைத்து தெய்வங்களும் வந்துவிடும். நாமும் ராம நாமத்தை கூறி வாழ்வில் அனைத்து வகை செல்வங்களைப் பெறுவோம்.

அந்த வீதியில் ராம நாமத்தை சங்கீர்த்தனமான பாடியபடி, பஜனைக் குழு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஈடுபாடில்லாத ஒரு இளைஞனைக் கண்ட ஒரு ஞானி, அவருக்கு ராம நாமத்தை உபதேசித்து, "இந்த நாமத்தை ஒருபோதும் விற்காதே. அதை ஆத்மாா்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்" என்று கூறினார்.

அவனும் ஒரே ஒரு முறை ஆத்மார்த்தமாக ராம நாமத்தை உச்சரித்தான். அதன் பிறகு அவன் அதை உச்சரிக்கவில்லை. கால ஓட்டத்தில் அவன் இறந்து போனான். எமலோகத்தில் இருந்து வந்த தூதர்கள், அவனது ஆத்மாவை கொண்டு போய், எமதர்மனின் முன்பாக நிறுத்தினர்.

எமதர்மன், அவனுடைய பாவ- புண்ணிய கணக்கை பரிசீலித்துப் பார்த்தார். பின்னர் "நீ உன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் ராம நாமத்தை உச்சரித்திருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ, அதைக் கேள்" என்றார்.

அப்போது 'இந்த நாமத்தை ஒரு போதும் விற்காதே' என்று ஞானி சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. உடனே அவன், இன்னது வேண்டும் என்று கேட்காமல் "ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்" என்றான்.

திகைத்துப்போன எமதர்மன், 'ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது' என்று நினைத்து, "இந்த விஷயத்தை இந்திரனிடம் கொண்டு போகலாம், என்னோடு வா" என்றார்.

அதற்கு அவன், "நான் வருவதென்றால் பல்லக்கில்தான் வருவேன். அத்துடன் பல்லக்குத் தூக்குபவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும்" என்றான்.

ராம நாமத்திற்கு மதிப்பிட்டு சொல்லும் வரை அவன் சொன்னதை செய்துதான் ஆக வேண்டும் என்பதால், எமதர்மன் அதற்கு ஒப்புக்கொண்டார். அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

இந்திரனோ, "ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது. பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்" என்றார்.

'எமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.

அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.

அவரும் "ராம நாம மகிமை சொல்ல என்னால் ஆகாது. வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம், வாருங்கள்" என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படி ஆயிற்று.

அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை' என்றனர்.

"இந்த ஆன்மாவைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே.. இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா?" என்று கூறி, பல்லக்கில் இருந்த ஆன்மாைவ தன்னுடன் சேர்த்துக் கொண்டாா், மகாவிஷ்ணு.

மேலும் செய்திகள்