< Back
ஆன்மிகம்
இஸ்லாம்: மனித நேயம் வளர்ப்போம்...
ஆன்மிகம்

இஸ்லாம்: மனித நேயம் வளர்ப்போம்...

தினத்தந்தி
|
24 Nov 2022 2:50 PM IST

இறை நம்பிக்கை என்பது இறைவனை வணங்குவதிலும், மற்ற ஏனையக் கடமைகளை செய்வதிலும் மட்டுமல்ல. அது பக்கத்து வீட்டுக்காரரின் பசியை போக்குவதிலும் இருக்கிறது என்ற மனித நேயத்தை நபிகளார் உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள்.

"தன் அண்டைவீட்டார்கள் எவராக இருப்பினும் அவர்கள் பசித்திருக்கும் போது தான் மட்டும் வயிறாற உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருக்கமுடியாது என்றார்கள் நபி களார்". (நூல்: மிஷ்காத்)

ஒரு வழிப்போக்கனுக்கு தன் இடத்தில் தங்கிச் செல்ல நபிகளார் இடமளித்து உபசரித்தார்கள். அடுத்த நாள் அவரை காணச் சென்றபோது அங்கு அவர் இல்லை. அவர் தங்கியிருந்த இடம் அசுத்தமாக இருந்தது. நபிகளாரே தனது கரங்களால் அந்த இடத்தை சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். அப்போது அங்கு தங்கி இருந்தவர், தான் மறந்து விட்டுச்சென்ற பொருளை எடுப்பதற்காக வந்தார். நபிகளாரே தன் கரங்களால் அந்த இடத்தை சுத்தம் செய்வதைக் கண்டு அதிர்ந்து போனார்.

ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று அவரிடம் ஒரு வார்தை கூட நபிகளார் கேட்கவுமில்லை, அவரை கடிந்து கொள்ளவுமில்லை. அவர் மனம் புண்படாதபடி நபிகளார் மிருதுவாக அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்கள்.

இங்குதான் நபிகளாரின் மனிதநேயம் மிகைத்து நிற்கிறது. தவறிழைத்தவரின் மனம்கூட புண்பட்டு விடக்கூடாது என்பதில் நபிகளார் உறுதியாக இருந்தார்கள்.

நபிகளார் கூறினார்கள்: "மனிதர்களிடம் இரக்கம் காட்டாதவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்". (நூல்: புகாரி)

அல்லாஹ்வின் இரக்கத்தை பெற வேண்டுமானால் மனிதர்களிடமும் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

மனித உயிரின் மகத்துவம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

"எவர் ஒருவர் மற்றோர் ஆன்மாவை கொலை செய்கிறாரோ, அப்போது அவர் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவர் போல ஆகிவிடுவார். எவரொருவர் அதனை (மனித ஆன்மாவை) வாழ வைக்கிறாரோ, அவர் மனிதர்கள் எல்லோரையும் வாழ வைத்தவரை போல ஆகிவிடுவார்". (திருக்குர்ஆன் 5:32)

இந்த இறைவசனம் மனித நேயத்தின் உச்சத்தை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

உக்பா இப்னு ஆமிர் என்ற நபித்தோழர் கூறுகிறார்: "நான் நபிகளாரின் கரம் பற்றி உயரிய நன் நெறிகளை (அமல்களை) எனக்கு கற்றுத் தருமாறு கேட்டேன்". அதற்கு நபியவர்கள், "உக்பாவே உன் உறவைத் துண்டித்தவர் களுடன் சேர்ந்து (உறவை முறிக்காமல்) இரு. உனக்கு யார் உதவவில்லையோ அவர்களுக்கு நீ உதவி செய். உனக்கு அநீதி இழைத்தவரை மன்னித்துவிடு (என்றார்கள்)". (நூல்: மஜ்வுஜ் ஜவாத்)

மனிதாபிமானம் என்பது இரக்கம் காட்டுவது, கனிவாகப் பேசுவது, பசித்தவருக்கு உணவு கொடுப்பது, பிறர் உணர்வை மதித்து நடப்பது, நலிவுற்றோருக்கு உதவிபுரிவது, உறவுகளை பேணி வாழ்வது, மன்னிப்பது போன்ற அழகிய நற்செயல்களால் ஆனது என்பதை நபியின் வாழ்வு நமக்கு கற்பிக்கும் மனித நேயப் பாடமாகும்.

உலகில் மனிதநேயத்தை காப்போம், மாண்புடனே அனைவரும் வாழ்வோம்.

மேலும் செய்திகள்