முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்
|அதிகபட்சமாக ஒரு பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெற்று வந்தது. இதில் முதல் 9 நாட்களுக்கு நடைபெறும் திருவிழாவின் போது இரட்டை குன்றின் மீது அமைந்துள்ள முருகன் அருகில் வைக்கப்பட்டுள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் வீதம் 9 நாட்களும் வைத்து பூஜை செய்யப்படும். இந்த பழங்கள் 11-ம் நாள் விழா இரவில் ஏலம் விடப்படுவது வழக்கம்.
அதன்படி, நேற்று இரவு 9 எலுமிச்சை பழங்களும் ஏலம் விடப்பட்டன. இதனை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் எடுத்தனர். 9 எலுமிச்சை பழங்களும் மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. அதிகபட்சமாக ஒரு பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.