< Back
ஆன்மிகம்
முன்வினை பாவம் நீக்கும் குரங்கணில் முட்டம்
ஆன்மிகம்

முன்வினை பாவம் நீக்கும் குரங்கணில் முட்டம்

தினத்தந்தி
|
14 March 2023 5:24 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ளது குரங்கணில் முட்டம். இங்கு பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். மறுபிறவி வேண்டாதவர்களுக்கு அருள்பாலிக்கும் இது, தேவாரம் பாடல் பெற்ற தலமாகும்.வினைப் பயன் காரணமாக வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் முட்டமாகவும் (காகம்) பூலோகத்தில் பிறப்பெடுத்தனர். தவத்தில் மேம்பட்ட ஆத்மஞானிகளான மகரிஷிகளின் சாபத்தால் அவர்களுக்கு இத்தகைய மிகக் கொடிய அனுபவம் நேரிட்டது. இதனால், மனம் வருந்திய மூவரும் திருக்கயிலாயம் சென்று உமையொருபாகனான சிவபெருமானை சரணடைந்து தங்களுக்கு சாப விமோசனம் அருளும்படி வேண்டி நின்றனர்.

அவர்கள் மீது கருணை கொண்ட சிவபெருமானும், நினைத்தவுடன் முக்தி தரும் திருத்தலங்கள் ஏழினுள் சிறப்பு பெற்ற, காஞ்சியின் தென்பால் உள்ள திருக்குரங்கணில்முட்டம் தலத்தில் தான் நித்திய சானியத்துடன் எழுந்தருளி இருப்பதாகவும், அங்கு சென்று தன்னை வழிபட்டால் வினை நீங்கும் என்றும் கூறினார்.

சிவபெருமானின் கட்டளையை ஏற்று குரங்கின் வடிவில் இருந்த வாலி, திருக்குரங்கணில்முட்டம் தலத்துக்குச் சென்று இறைவனை வழிபட்டான். சிவனும் பார்வதியுடன் காட்சி தந்து வாலிக்கு அருள்பாலித்து சாப விமோசனம் அளித்தார். வாலியை அடுத்து இந்திரனாகிய அணில் திருக்குரங்கணில்முட்டம் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட, பெருமானும் காட்சியளித்து வினையை நீக்கி அருள்பாலித்தார்.அதன் பிறகு தர்மத்தை ரட்சிக்கும் எமதர்மனும் காகம் உருவில் வந்து தனது அலகினால் (மூக்கு) கீறி ஒரு திருக்குளம் உண்டாக்கி, அந்தப் புனித நீரினால் பல காலம் நீராடி சிவபெருமானை வழிபட்டு வந்தார். அதனால், உள்ளம் மகிழ்ந்த திருக்கயிலைநாதனும் எமதர்மனுக்கு உமாதேவியுடன் காட்சியளித்து வினையை நீக்கி அருள்பாலித்தார்.

குரங்கு, அணில், காகம் ஆகிய மூன்றுக்கும் சாப விமோசனம் அளித்து ஆட்கொண்ட திருத்தலமானதால், இது 'திருக்குரங்கணில்முட்டம்' என அழைக்கப்படுகிறது. வாலிக்கு திருவருள் புரிந்ததால் இறைவனுக்கு 'வாலீஸ்வரர்' என்ற திருநாமமும் ஏற்பட்டது.

மனிதப் பிறவியில் இனிய பிறவாமை வேண்டி, அருளாளர்களின் அடிச்சுவட்டில் ஒழுகி, அவன் அருளால் அவன் தாள் வணங்கி, இம்மை மறுமை நலம் பெற்று உய்வதற்காக, பெருமான் திருத்தலத்தில் சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

குரங்கு வடிவில் வந்த வாலி, சிவனை வணங்கியபோது அவருக்கு பூஜை செய்வதற்கு கையால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜித்தாராம். எனவே, சிவனுக்கு 'கொய்யா மலர் நாதர்' (பறிக்காத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற பெயரும் உண்டு. மேற்குப் பார்த்த இவரது சன்னிதி தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறது. குரங்கு, அணில், முட்டம் (காகம்) ஆகியவை வழிபட்ட வரலாறு ஆலயத்தின் முகப்பு வாசலின் கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இது, எக்காலத்திலும் அழியாத அரிய காட்சியாக விளங்குகிறது.

மூலவர் வாலீஸ்வரரை ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர் பக்தர்கள்.ஆரோக்கிய குறைவினால் சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் ஏற்படும். இத்தகைய தோஷத்தை ஜனன கால கிரகநிலைகளின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரம் விளக்கி உள்ளது. இத்தகைய தோஷம், திருத்தலத்தின் அருள்பாலிக்கும் வளையம்மையின் சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட்டால் நீங்கும். இது போன்று சிறுவயதில் குழந்தைகளின் ஆயுளுக்கும் பங்கம் ஏற்படுத்தும் பாலாரிஷ்டம் என்ற தோஷம் இத்திருக்கோவிலின் காகப் புஷ்கரணியில் நீராடி வாலீஸ்வரரை தரிசிப்பதால் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள், துர்க்கை, சப்த மாதர்கள், நால்வர் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள அம்பாள் பெயர் 'இறையார் வளையம்மை'. இவள் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கியபடி அருள் பாலிக்கிறார்.

அமைவிடம்

இத்திருத்தலம் காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி-செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள தூசி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் 1½ கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்