< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்

திருச்சி: வெகுசிறப்பாக நடைபெற்ற வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தினத்தந்தி
|
6 July 2022 12:06 PM GMT

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருச்சி:

திருச்சி உறையூரில் சக்தி தலங்களில் புகழ்பெற்ற வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் அம்மன் கூரையின்றி மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வெட்ட வெளியில் வீற்றிருந்து மக்களை காத்து வருகிறார்.

பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புதிதாக கருங்கல் அர்த்தமண்டபம், அர்த்தமண்டப கதவு மற்றும் நிலைக்கு வெள்ளி தகடு போர்த்துதல், அலங்கார மண்டபம், தூண்கள் கலைநயத்துடன் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்றன. மேலும் அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்கள், பழுதுநீக்கி புதுப்பித்தல் உள்பட பல்வேறு திருப்பணிகளும் நடைபெற்றன.

இந்த திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் பூஜை, அங்குரபூஜை, பிம்பசுத்தி, மூலாலய மூர்த்திகளுக்கு ரக்‌ஷா பந்தனம், காலை 5 மணிக்கு நாடிசந்தானம், ஸ்பர்சாஹுதி மற்றும் திரவியாஹுதியும், காலை 6 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், தீபாரதனை, யாத்ராதானம் நடைபெற்றது.

பின்னர் காலை 6.20 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் அடக்கிய கும்பங்களை திருவானைக்காவல் எஸ்.சந்திரசேகர சிவாச்சாரியர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் அவற்றை கோபுரத்துக்கும், விமானத்துக்கும் மூலஸ்தானத்துக்கும் எடுத்துச்செல்லப்பட்டது.

சரியாக 6.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று விண்ணதிர கோஷம் எழுப்ப கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காலை 6.50 மணிக்கு வெக்காளியம்மன் மற்றும் பரிவார தெய்வ விக்ரகங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கலசபூஜைகளும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் ஞானசேகரன், லட்சுமணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்