இன்பமான வாழ்வு தரும் கிருஷ்ண ஜெயந்தி
|நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
ஆவணி மாத அஷ்டமி தினமும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தவர், கிருஷ்ண பகவான். இவர் அவதரித்த நாளையே நாம், "கோகுலாஷ்டமி' என்றும், 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும் கொண்டாடுகிறோம். அஷ்டமி திதியின்படி கிருஷ்ணரின் பிறந்தநாளை கொண்டாடுபவர்கள், "கோகுலாஷ்டமியாகவும், ரோகிணி நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கிருஷ்ணரை வழிபடுபவர்கள், 'கிருஷ்ண ஜெயந்தியாகவும் வழிபாட்டை நடத்துகிறார்கள்.
கம்சன் என்பவன் அதர்மத்தின் வழியில் நின்று ஆட்சி செலுத்தி வந்தான். தன்னுடைய சகோதரியான தேவகியின் மூலமாக பிறக்கும் எட்டாவது குழந்தையால் தனக்கு ஆபத்து என்பதை அறிந்த கம்சன், தன் சகோதரியையே கொல்ல முயன்றான். ஆனால் தேவகியின் கணவரான வசுதேவர், 'எங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளை உன்னிடமே ஒப்படைக்கிறோம்' என்று கூறியதன் அடிப்படையில் தங்கையைக் கொல்லாமல், கணவரோடு சேர்த்து சிறையில் அடைத்தான்.
அதன்பின், தேவகிக்கு சிறையில் பிறந்த குழந்தைகள் அனைவரையும், சுவரில் எறிந்து கொன்றான். எட்டாவது குழந்தைக்காக காத்திருந்தான். தேவகி தன் எட்டாவது குழந்தையை பெற்றெடுத்தாள். நள்ளிரவில் பிறந்த அந்தக் குழந்தையை, அருகில் இருந்த கோகுலத்தில் நந்தகோபரின் மனைவி யசோதையிடம் வைத்துவிட்ட யசோதைக்கு பிறந்த பிள்ளையை எடுத்து வரும்படி வசுதேவருக்கு ஒரு அசரீரி கேட்டது. அவரும் அப்படியே செய்தார். ஆனால், அவருக்கு தான் செய்த எந்தச் செயலும் நினைவில் இல்லாதபடி மாயையால் மனம் மாற்றப்பட்டது.
வசுதேவர் சிறையில் இருந்து புறப்பட்டபோது, தெய்வீக சக்தியால் காவலர்கள் அனைவரும் மயக்கமுற்றனர். யமுனை ஆறு இரண்டாக பிளந்து வழிவிட்டது போன்ற அதிசயங்கள் நிகழ்ந்தன.
இந்த விஷயத்தை அறிந்த கம்சன், கோகுலத்தில் இருந்த கிருஷ்ணரை அழிக்க பலமுறை முயன்றும், அவனது முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிறுவனாக இருந்த கிருஷ்ணரை தன்னுடைய இருப்பிடத்திற்கே அழைத்து, கொல்வது என்று கம்சன் முடிவு செய்தான். அதன்படி மதுராவுக்கு வந்த கிருஷ்ணரை, மல்யுத்தம் செய்ய அழைத்தான். அவரோ சிறுவன். அவருடன் மல்யுத்தம் செய்ய வந்தவர்களோ வயதிலும், அனுபவத்திலும் உயர்ந்தவர்கள். ஆனாலும், அவர்களை எல்லாம் மல்யுத்தத்தில் வென்ற கண்ணன், இறுதியாக கம்சனுடன் யுத்தம் செய்து வதம் செய்தார்.
அனைவரும் கண்ணன் அவதரித்தது கம்சனை அழிப்பதற்காக என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர் அவதரித்தது, அதர்மத்தை அழிப்பதற்காகத்தான். கம்சனை அழிப்பதுதான் நோக்கம் என்றால், அவனைக் கொன்றதுமே கிருஷ்ணரின் அவதாரம் நிறைவு பெற்றிருக்கும். ஆனால் உலகம் முழுவதும் பரவியிருந்த அதர்மத்தை அழிப்பதற்காக தோன்றியவர் அவர் என்பதால்தான், குருஷேத்திர யுத்தம் வரை அவர் அவதாரம் நீண்டது என்பதை நாம் இங்கே பார்க்கவேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபாடு செய்வது, பல்வேறு நலன்களைப் பெற்றுத் தரும். அன்றைய தினம் காலை நீராடி, இறைவனின் நாமங்களைச் சொல்லியபடியே விரதம் இருக்க வேண்டும். அன்று முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம். விரதம் இருக்கும் நாள் முழுவதும் 'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய ஸ்வாஹா' என்ற மந்திரத்தை உச்சரித்து வரலாம்.
கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும். சில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து, கலசநீரால் கிருஷ்ணனுக்கு அபிஷேக, ஆராதனை செய்வார்கள். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். கேரளா போன்ற இடங்களில் 'மோகினி ஆட்டம்' நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும்.
உற்சவர் வீதி உலா வரும்போது, அதன் பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள். முன்னால், கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க கிருஷ்ணர் வீதி உலா வருவார். பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். மங்கல வாத்தியங்கள் முழங்க கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் கண்ணன் வரவேண்டும் என்பதற்காக வீட்டின் வாசலில் மாக்கோலம் இடுவார்கள். மேலும் வாசல் முதல் வீட்டில் உள்ள பூஜை அறை வரை, சின்னக் கண்ணனின் பாதத்தை வரைந்து வைப்பார்கள். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.
கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை இரவு நேரத்தில் செய்வதுதான் நல்லது. சிலர் காலையில் வழிபாட்டை முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு வேளை என்பதால், அந்த நள்ளிரவு வரை இல்லாவிட்டாலும் இரவு 8 மணிக்கு மேல் கிருஷ்ணனை ஆராதித்து வழிபாடு செய்வதுதான் சிறப்பான பலனை அளிக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
பூஜை அறையில் கிருஷ்ணரின் சிலையை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதற்காக கடைகளில் வர்ணம் பூசிய கிருஷ்ணர் சிலை விற்பனை செய்வதை வாங்கி வந்து வழிபடலாம். அல்லது வீட்டில் உள்ள கிருஷ்ணர் படங்களை வைத்து வணங்கலாம். பூஜை அறையை சுத்தம் செய்து அரிசி மாவு கோலம் போட்டு தீபம் ஏற்றி வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்து, அதன் பிறகு கிருஷ்ணரை பூஜிக்க வேண்டும். கிருஷ்ணருக்கு, பவளமல்லி, நந்தியாவட்டை, துளசி உள்ளிட்டவற்றால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியமாக பசும்பால், பசு வெண்ணெய், வெல்லத்தில் செய்யப்பட்ட சீடை, உப்பு சீடை, இனிப்பு மற்றும் பலகாரங்கள் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு கிடைப்பதுடன், பூஜிப்பவர்களுக்கு துன்பங்கள் விலகி, இன்பங்கள் வந்து சேரும்.
-'ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியார்