கோவில்பட்டி: செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
|கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை ,திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடிமரத்தில் பட்டர்கள் கொடியேற்றினர்.
அதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள், கொடிமரம், நந்தி, பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, அறங்காவலர்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, நிறுத்திய லட்சுமி, ரவீந்திரன், கோயில் ஆய்வாளர் சிவகலைப்பிரியா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு 7 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலையிலும் மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 13-ஆம் தேதி தேரோட்டமும், 14-ஆம் தேதி தீர்த்தவாரியும், 15-ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.