சங்கு-சக்கரத்துடன் அருளும் கோதண்டராமர்
|செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த பொன்பதர்கூடம் என்ற ஊரில் உள்ள கோதண்டராமர், வில்-அம்பு இன்றியும், கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியும் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார்.
கோதண்டராமர் என்ற திருநாமத்தில், மகாவிஷ்ணு பல்வேறு திருத்தலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பொதுவாக கோதண்டராமர் என்றாலே, வில் அம்போடுதான் காட்சி தருவார். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த பொன்பதர்கூடம் என்ற ஊரில் உள்ள கோதண்டராமர், வில்-அம்பு இன்றியும், கரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியும் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். இத்தல இறைவனுக்கு 'சதுர்புஜ கோதண்டராமர்' என்று பெயர்.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதாதேவியின் மீது பரிவு காட்டிய திரிசடை, ராவணனின் மறைவிற்குப் பின்னர், அவனுடைய மனைவி மண்டோதரி ஆகிய நால்வருக்கும், நான்கு திருக்கரங்களுடன் சங்கு-சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணு திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார். இந்த திருக்காட்சியைத் தானும் தரிசிக்க விரும்பிய தேவராஜ மகரிஷி, இத்தலத்தில் மகாவிஷ்ணுவை நினைத்துத் தவமியற்றினார். தேவராஜ மகரிஷியின் பக்திக்கு மனமிரங்கிய மகாவிஷ்ணு சங்கு, சக்கரம், அபயம், ஹஸ்தம் என நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜ கோதண்டராமராக காட்சி கொடுத்து அருளினார். தான் கண்ட இக்காட்சியை பக்தர்களும் கண்டு மகிழ வேண்டும் என்று மகரிஷி வேண்டிக்கொள்ள, மகாவிஷ்ணு இத்தலத்தில் சதுர்புஜ கோதண்டராமராக எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது. பிற்காலத்தில் இங்கே கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
தர்மதிஷ்டர் என்ற மகான், ஒரு சமயம் சாபத்தின் காரணமாக தோல் வியாதியால் பாதிப்படைந்தார். அந்த நோய் நீங்குவதற்காக அவர் இத்தலத்து கோதண்டராமரை வழிபட்டார். இதையடுத்து தர்மதிஷ்டரின் நோயை போக்கி அருளினார், கோதண்டராமர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து இத்தல இறைவனான கோதண்டராமருக்கு துளசி மாலை அணிவித்து கல்கண்டு படைத்து வேண்டிக்கொண்டால், தோல் வியாதிகள் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகம். மேலும் திருமணத் தடை உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து திருமணக் கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் சீதாதேவி சமேத சதுர்புஜ கோதண்டராமரை தரிசித்து வணங்கினால், விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.
ராஜகோபுரம் இல்லாமல் காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், விளக்குத் தூண், பலிபீடம், கொடிமரம் முதலானவை காணப்படுகின்றன. அடுத்ததாக வழக்கமான இடத்தில் பெரிய திருவடி, ஒரு சிறு சன்னிதியில் சதுர்புஜ கோதண்டராமரை பார்த்த வண்ணம் வீற்றிருக்கிறார். முன்மண்டபத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மகாதேசிகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையில் புஷ்பக விமானத்தின் கீழ் சதுர்புஜ கோதண்டராமர் அமர்ந்த திருக்கோலத்தில், இடதுகாலை மடித்து வைத்த நிலையிலும் வலதுகால் திருப்பாதத்தை பூமியை நோக்கி வைத்தவாறும் கிழக்குதிசை நோக்கி அருள்பாலிக்கிறார். வலதுபுறத்தில் சீதாதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள்கிறார். கோதண்டராமருக்கு அருகில் லட்சுமணர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறைக்குள் சீதாதேவியை நோக்கி, அனுமன் மேற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.
பெரும்பாலான தலங்களில் அருளாட்சி செய்யும் கோதண்டராமர், கையில் வில்-அம்பு வைத்திருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள கோதண்டராமரின் கரங்களில் வில்- அம்பு இல்லை. அதற்கு பதிலாக சங்கு, சக்கரம் ஏந்தியும், அபயம், ஹஸ்தம் காட்டியும் சீதாதேவியுடன் திருமணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சி என்கிறார்கள்.
இத்தலத்து உற்சவமூர்த்தி அபூர்வமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். விரல், நகம் மற்றும் கைகளில் ரேகைகள் தெரியும்படியாக இந்த உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு கோலத்தில் ராமபிரான் காட்சி தந்த தலம் என்பதால், இத்தல உற்சவரின் திருமார்பில் மகாலட்சுமி அமைந்திருப்பது கூடுதல் விசேஷம். சீதாதேவியைத் திருமணம் செய்யும் முன்னர் ராமபிரான் இடது கால் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்து உடைத்தார் என்பதன் அடிப்படையில், இடதுகால் சற்று முன்னே அழுத்திய நிலையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கோலத்தில் ராமபிரானை தரிசிப்பது அபூர்வம். ஆஞ்சநேயர் பவ்யமாக அமர்ந்திருக்கும், உற்சவர் கோலத்தினையும் இங்கே காணலாம்.
தைப்பொங்கல் தினத்தன்று இத்தல இறைவனுக்கு, விசேஷ திருமஞ்சனமும், பரிவேட்டை உற்சவமும் நடைபெறும். ராமநவமி, பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம், திருவாதிரை ஸ்ரீஉடையவர் சாற்றுமுறை, ஸ்ரீராமர் கோடை உற்சவம், நவராத்திரி உற்சவம், அன்னக்கோடி உற்சவம், தனுர்மாத பூஜை, அனுமன் ஜெயந்தி முதலான உற்சவங்கள் ஆண்டுதோறும் ெவகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தினமும் காலை, மாலை என இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. வைகானஸ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்திற்குள், 'சேஷதீர்த்தம்' என்ற தீர்த்தக்குளம் உள்ளது. தேவராஜ புஷ்கரணி என்ற தீர்த்தம், ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் இருக்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
செங்கல்பட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் பொன்பதர்கூடம் என்ற இத்தலம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, பொன்பதர்கூடம் வழியாக இயக்கப்படுகிறது. தவிர செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது.