மகிழ்ச்சிக்கான திறவுகோல்
|ஆண்டவரோடு இணைந்து வாழ்கின்ற நன்னெறியும், நற்பண்புகளும் நிறைந்த நல்வாழ்வே உண்மையான நிறைமகிழ்வைத் தருகிறது என்பதை நன்கு உணர்ந்து, ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.
நமது வாழ்வை இனிமையாக்குவதும், அழகாக்குவதும், தொடர்ந்து வாழ்வதற்கான உந்துதலை தருவதும் அவ்வப்போது நம் வாழ்வில் தோன்றி மறைகின்ற மகிழ்ச்சியான அனுபவங்களே. ஆனால் வாழ்வில் மகிழ்ச்சிக்கான தேடலும், மகிழ்ச்சிக்கான வெற்றிடமும், எப்போதும் மகிழ்ச்சியாய் வாழவேண்டுமென்ற ஆவலும் நம்மில் இருக்கின்றது. மனிதன் மகிழ்ச்சியாய் வாழ பல்வேறு முயற்சிகளைச் செய்கிறான். எல்லாமே தற்காலிக மகிழ்ச்சியைத் தருகின்றதே தவிர, எதுவும் நிறைவான, நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை.
தூய பவுலடிகளார் பிலிப்பியா திருமுகத்தில் "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்" (பிலிப்பியா 4:4) என்கிறார்.
ஆண்டவரோடு இணைந்து வாழும் வாழ்வு
'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' எனும்போது இங்கே மகிழ்ச்சி என்பது உவகை, ஆனந்தம், சந்தோஷம் என்ற பொருள்களுடன் உள்ளார்ந்த மகிழ்ச்சியைக் குறிக்கிறது. உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 136-வது இடத்திலும், பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்திலும் உள்ளது. 5 முதல் 20 சதவீதம் மக்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 70 சதவீதம் மக்கள் தங்கள் பணி குறித்து வெறுப்புணர்வு உள்ளவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.
ஆண்டவரோடு இணைந்து வாழ்கின்ற நன்னெறியும், நற்பண்புகளும் நிறைந்த நல்வாழ்வே உண்மையான நிறைமகிழ்வைத் தருகிறது என்பதை நன்கு உணர்ந்து, ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.
இதுவே ஆண்டவர் இயேசுவின் வேண்டுதலும், எதிர் பார்ப்பும், ஏக்கமுமாய் இருக்கிறது. "நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றி கனி தர இயலாது''.
"ஒருவர் என்னுடனும், நான் அவருடனும், இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்" (யோ 15:4,5).
ஆண்டவரோடு இணைந்துள்ள வாழ்வே நம் மனதையும், உள்ளத்தையும், உடலையும் பாதுகாக்கும்.
பவுலடிகளார், ரோமப் பேரரசர் நீரோ காலத்தில் சிறைப்பட்டிருந்த நிலையில், ஆன்மிக வாழ்வில் பெருந்துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களிடம் முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார். மகிழ்வுடன் துன்பத்தைத் தாங்கவும், துன்பத்தின் நடுவிலும் சந்தோஷமாக இருக்கவும் விரும்புகிறார்.
இறையருளைப் பகிர்ந்து வாழும் வாழ்வு
'நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை' (எபி 13:16).
கிறிஸ்துவின் வழியாகக் கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்கின்ற ஈகை மிகுந்த நிறைவாழ்வும் நமக்கு உண்மையான மகிழ்வைத் தருகிறது. இறையருள் நிறைந்திருக்கும் மகிழ்ச்சியான மனம் இரக்கத்துடன் செயல்படுகிறது.
உலகில் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் நைஜீரியாவைச் சேர்ந்த பெமி ஓடெடோலா. அவரிடம் 'உங்களை மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது எது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு கூறினார்:
"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் நான்கு நிலைகளை கடந்து விட்டேன். இறுதியாகவே, உள்ளார்ந்த மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன்".
முதலாவது கட்டமாக செல்வங்களைக் குவித்தேன், ஆனால் இதில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கவில்லை. இரண்டாவதாக விலை உயர்ந்த, மதிப்புமிக்க பொருட்களை சேகரித்தேன். ஆனால் இதுவும் தற்காலிகமானது தான். பொருட்கள் மீது கொண்ட ஈர்ப்பு நீண்டகாலம் நீடிக்காது என்பதை உணர்ந்தேன். மூன்றாவதாக பெரிய அளவிலான வர்த்தகம் செய்தேன். நைஜீரியா, ஆப்பிரிக்காவில் 95 சதவீதம் டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்கா, ஆசியாவில் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் அதிலும் நான் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
இறுதியாக என் நண்பன், 200 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கிக் கொடுக்குமாறு கேட்க, அதைச்செய்தேன். நானும் அவனுடன் சென்று குழந்தைகளிடம் என் கைகளால் அவற்றைக் கொடுத்தேன். அப்போது அந்த பிஞ்சு குழந்தைகளின் முகத்தில் பேரொளியின் பிரகாசத்தைப் பார்த்தேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்து சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர். விவரிக்க இயலாத பேரானந்தம், நான் எதிர்பார்த்ததை விட மேலான மகிழ்ச்சி, என்னுள் நிலவிய அற்புதத்தை உணர்ந்தேன்.
எல்லாம் முடிந்து நான் புறப்பட்ட போது ஒரு சிறு பெண்குழந்தை செல்லமாக என் கால்களைப் பிடித்தது. நான் குனிந்து அக்குழந்தையிடம் 'உனக்கு வேறு ஏதாவது வேணுமா?' என்று கேட்டதும், 'நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன். உங்களைச் சொர்க்கத்தில் சந்திக்கும்போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்குப் பிடித்ததை வாங்கித் தருகிறேன்' என்று சொல்லி அந்தக் குழந்தை சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்றுவிட்டது.
கடவுளின் நிறையருளை அன்று தான் முழுமையாக உணர்ந்தேன். இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. வாழ்க்கைப் பற்றிய எனது அணுகுமுறையை முற்றிலும் மாற்றியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இரக்க உணர்வின் பெருக்கமே உண்மையான மகிழ்ச்சிக்கான நெருக்கமாக இருக்கின்றது. பெற்றுக்கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை என்றார் ஆண்டவர் இயேசு (தி.ப 20:35).