கார்வேட்டிநகரம் வேணுகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்
|மங்கல வாத்தியங்கள் முழங்க, பஜனைகள் மற்றும் கோலாட்டம் களைகட்ட, சுவாமி எழுந்தருளிய திருத்தேர் மாட வீதிகளில் வலம் வந்தது.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரத்தில் உள்ள ருக்மணி, சத்யபாமா உடனுறை வேணுகோபால சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உற்சவர் வேணுகோபால சுவாமி தனித்தும், தனது உபய நாச்சியார்களான ருக்மணி, சத்யபாமாவோடு இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ருக்மணி, சத்யபாமாவுடன் வேணுகோபால சுவாமி தேரில் எழுந்தருள, பக்தர்கள் கோவிந்த நாமம் சொல்லி வடம் பிடித்து தேர் இழுத்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க, பஜனைகள் மற்றும் கோலாட்டம் களைகட்ட, சுவாமி எழுந்தருளிய திருத்தேர் மாட வீதிகளில் வலம் வந்தது.
கோவில் உதவி செயல் அலுவலர் பார்த்தசாரதி, கண்காணிப்பாளர் சோம சேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.