கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
|தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
கன்னியாகுமரி,
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வ ரூப தரிசனமும் நடந்தது. அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும்,10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பல வகையான மலர்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி வலம் வருகிறார். பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெறும்.