கம்பர் வாக்கின் வலிமை
|இறைவனின் மீது பக்தி கொண்டவர்களின், சொல்லுக்கும் சக்தி உண்டு என்பதை மெய்ப்பித்த நிகழ்வு இது.
கலைவாணி என்று அழைக்கப்படும் வாக்குக்கு அதிபதியான 'சரஸ்வதிதேவி'யின் பக்தராக விளங்கியவர், கம்பர். ஒரு முறை கம்பர், சோழ நாட்டில் இருந்து புறப்பட்டு, வேறு தேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கையில் பணம் இல்லை. கம்பரின் கவிப் பெருமையை அறிந்து ஆதரிப்பவர்களும் இல்லை. எனவே பணத்திற்கு என்ன வழி என்று சிந்தித்தபடியே சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு ஊரில், வேலி என்ற பெண், ஒரு அறிவிப்பு வெளியிட்டிருப்பது பற்றி அறிந்தார். அதாவது, வேலி வீடு கட்ட முயற்சித்தாள். என்ன காரணமோ தெரியவில்லை. வீட்டின் பின்புறச் சுவர் மட்டும் இடிந்து கொண்டே இருந்தது. கட்டுமான வேலையில் திறமைசாலிகள் பலரும் முயன்றும் கூட, அந்தச் சுவர் நிற்கவில்லை. கட்டி முடிக்கும் தருவாயில் முழுமையாக சரிந்து விழுந்து கொண்டிருந்தது. இதனால் சுவரை நல்லவிதமாக கட்டித் தருபவர்களுக்கு, 8 படி நெல் கொடுப்பதாக அவள் அறிவித்திருந்தாள். அந்த நாளில் 8 படி நெல் என்பது பெரிய சன்மானம்.
அறிவிப்பு அறிந்து, வேலியின் வீட்டிற்குச் சென்ற கம்பர், "பின்புறச் சுவரை நான் கட்டித்தருகிறேன்" என்று ஒப்புக்கொண்டார். பின்னர் மண் குழைத்து, கற்களை அடுக்கி பூசி, சுவரை கட்டி முடித்தார். ஆனால் அந்த சுவர் வழக்கம் போல விழுந்துவிட்டது. அதைப் பார்த்த கம்பர், மீண்டும் சுவர் கட்டும் பணியைச் செய்தார். அப்போது கலைவாணியை நினைத்து, 'வேலி தரும் கூலி, நெற் கொண்டு போம் அளவும் நில்லாய் நெடுஞ்சுவரே..' என்று பாடினார்.
இப்போது கம்பரால் கட்டி முடிக்கப்பட்ட சுவர், கீழே விழாமல் நின்றது. ஆச்சரியம் அடைந்த வேலி, தான் அறிவித்தபடி 8 படி நெல்லையும் கம்பரிடம் கொடுத்தாள். ஆனால் அந்த நெல்லைப் பெற்ற கம்பர் அங்கிருந்து நகரத் தொடங்கியதும், சுவர் கீழே விழுந்து விட்டது. வேலிக்கு அதிர்ச்சியானது. கம்பருக்கும் அதிர்ச்சிதான் என்றாலும் அவர் கலங்கவில்லை. கலைமகளை மீண்டும் தியானித்து, மறுபடியும் சுவரை எழுப்பும் பணியைச் செய்தார். இப்போது 'நெற் கொண்டு போனாலும் நில்லாய் நெடுஞ்சுவரே..' என்று தான் முன்பு பாடிய பாடலில் சிறிய வார்த்தை மாற்றம் செய்து பாடினார்.
கம்பரால் கட்டி முடிக்கப்பட்ட அந்த சுவர், இப்போது விழவில்லை. உறுதியாக நிலைத்து நின்றது. வேலியும், ஊர் மக்களும் வியந்து போயினர். இறைவனின் மீது பக்தி கொண்டவர்களின், சொல்லுக்கும் சக்தி உண்டு என்பதை மெய்ப்பித்த நிகழ்வு இது.