கற்பனைக்கும் எட்டாத கயிலாசநாதர் கோவில்
|குடைவரைக் கோவில்களுக்கு புகழ்பெற்றவை, எல்லோராவில் உள்ள குகைக்கோவில்கள். இது யுனெஸ்கோ சான்று பெற்றது. இங்கு மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பவுத்தம், இந்து, சமணம் ஆகியவற்றுக்கான குடைவரைகள் அமைந்துள்ளன. இவை ஒரே நேரத்தில் வழிபாட்டிலும் இருந்துள்ளன.
* எல்லோராவில் ஒரே இடத்தில் 34 குடைவரைக் கோவில்கள் அமைந்துள்ளன. இதில் 1 முதல் 12 வரை பவுத்த கோவில்கள், 13 முதல் 29 வரை இந்து கோவில்கள், மீதமுள்ள ஐந்தும் சமணத்திற்கு உரியவை.
* இதில் 16-ம் எண் கொண்ட குடைவரைக் கோவிலாக அமைந்ததுதான், கயிலாசநாதர் திருக்கோவில்.
* இந்தக் கோவில், கி.பி.7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கட்டி முடிக்க சுமார் 100 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.
* சிவபெருமான் வீற்றிருப்பதாக சொல்லப்படும் கயிலாய மலையைப் போன்ற அமைப்பில், இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* சிவபெருமான் பார்வதி மற்றும் நந்தி, பூதகணங்களோடு கயிலையில் வீற்றிருந்தபோது, ராவணன் அந்த மலையை பெயர்த்தெடுக்க முயன்ற புராணக்கதை ஒன்று உண்டு. அந்தக் காட்சி இங்கே தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
* கருவறையில் கயிலாசநாதர் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
* நந்தி மண்டபம், விமானம், இரண்டு கோபுரங்கள், இரண்டு அழகிய கல் தூண்கள் என்ற அமைப்பில் உள்ளஆலயத்தின் அடிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள யானைகள், ஆலயத்தையே தாங்குவது போல் காட்சி தருகின்றன.
* காண்பவர்களைக் கவரும் வகையிலான இந்த சிற்பக்கலைக்கூடம், மகாராஷ்டிரா மாநிலம் எல்லோராவில் இருக்கிறது. அவுரங்கபாத் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டரில் இந்த இடத்தை அடையலாம்.
* இது ஒற்றைக்கல் ஆலயமாகும். மலையைக் குடைந்து, தேவையற்ற கற்களை நீக்கி மட்டுமே உருவாக்கப்பட்டது. மொத்த ஆலயமும் 85 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள ஒரே பாறையில் வடிக்கப்பட்டிருக்கிறது.
* 148 அடி நீளம், 62 அடி அகலம், 100 அடி உயரம் கொண்ட பிரம்மிப்பூட்டும் இந்தக் கோவில், மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக செதுக்கப்பட்டிருக்கிறது.
* கோவில் முழு வடிவம் பெறுவதற்காக வெட்டி நீக்கப்பட்ட பாறைகள் மட்டும் சுமார் 4 லட்சம் டன் எடை இருக்கும் என்கிறார்கள்.