< Back
ஆன்மிகம்
இயேசு: வெறுப்பை விரட்டும் அன்பு
ஆன்மிகம்

இயேசு: வெறுப்பை விரட்டும் அன்பு

தினத்தந்தி
|
16 Aug 2022 4:16 PM IST

ஒருவர் நமக்கு எதிராகத் தீமை செய்தால் அவருக்குரிய தண்டனை கிடைக்கும் போதுதான், நாம் நிம்மதி அடைகிறோம். அல்லது அந்தத் தீமைக்குப் பதிலாக அதை விடப் பெரிய தீமையை நாம் அவர்களுக்குச் செய்யும் போது ஆறுதல் அடைகிறோம். அதன் காரணம் என்ன?

நமது மனதின் அடி ஆழத்தைத் தோண்டிப் பார்த்தால், 'கர்வம்' எனும் குணாதிசயம் நம்மை அறியாமலேயே கண்விழித்துக் கிடக்கும். 'நான்' தோற்று விட்டேன் எனும் சிந்தனை எழும்போது ஆவேசம் எழுகிறது.

சிக்னலில் நம்மை முந்திச் செல்லும் ஏதோ ஒரு வாகனத்தின் மீது நாம் கோபம் கொள்வதற்கும், அலுவலகத்தில் நம்மை முந்திச் செல்லும் இளைய பணியாளர் மீது வெறுப்பு கொள்வதற்கும் அதுவே காரணம்.

அதனால் தான் இயேசு சொன்னார், "கர்வத்தை விட்டொழிக்க வேண்டுமெனில், விரும்பியே இழக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்".

"உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு இடக்கன்னத்தையும் காட்டுங்கள்" என்றார் இயேசு. ஒருவர் வலுக்கட்டாயமாய் உங்களை காயப்படுத்தினால் கவலைப்படாதீர்கள். "விரும்பியே காயப்படத் தயாராய் இருக்கிறேன் எனச் சொல்லுங்கள்" என்றார்.

பண்டைக்காலத்தில் தவறுகளை விட தண்டனை கொடுமையாய் இருந்தது. கையை வெட்டியவனின் தலையை வெட்டுவது சகஜமாய் இருந்தது. அதனால் தான் மோசே சட்டங்களை வரையறை செய்தார். ஒருவன் உன் பல்லை உடைத்தால், நீயும் அவன் பல்லை உடைக்கலாம். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் அவ்ளோ தான் என்றார். சட்டங்களால் ஒழுங்கு வரும் என நினைத்தார்.

இயேசுவோ, சட்டங்கள் எப்போதும் சமாதானத்தைக் கொடுக்காது. உள்ளார்ந்த மாற்றமும், ஈகோ இல்லாத மனமும், பிறர் மீதான அன்புமே தீர்வைத் தரமுடியும் என நம்பினார்.

எனவே தான், ''ஒருவர் உங்களுடைய அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால் சண்டை போடாதீர்கள், இதோ என் மேலாடை என அதையும் கூட கொடுங்கள்'' என்றார்.

''தேவையில் உழலும் மக்களுக்குக் கொடுப்பதற்குத் தயங்கக் கூடாது. சட்டம் பேசக் கூடாது. பசியில் ரொட்டி திருடுபவனைக் கட்டி வைத்து அடிப்பதல்ல தீர்வு. அவன் பசிக்கு ரொட்டி மட்டுமல்ல, முழு சாப்பாடும் கொடுப்பதே தீர்வு'' என்கிறார் இயேசு.

"கேட்கும் எவனுக்கும் கொடுங்கள்! கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகம் கோணாதீர்கள்" என பரிவின் உச்சத்தைப் போதிக்கிறார். 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என உலகம் சொல்லும், நீங்களோ பிச்சையிடுங்கள். பாத்திரத்தை அறியும் ஆராய்ச்சியில் இறங்காதீர்கள் என்கிறார். கடன் வாங்க விரும்புவனுக்கு கடன் கொடுப்பது மட்டுமல்ல, அதை முக மலர்ச்சியோடும் அன்போடும் கொடுக்க வேண்டும் என்கிறார்.

நெருப்பை நெருப்பு அணைக்காது, வெறுப்பை வெறுப்பு தணிக்காது. நம்மை இழந்தும், அன்பை வளர்ப்போம்.

மேலும் செய்திகள்