< Back
ஆன்மிகம்
இஸ்லாம்: அன்பை விதைப்போம், அன்பை வளர்ப்போம்
ஆன்மிகம்

இஸ்லாம்: அன்பை விதைப்போம், அன்பை வளர்ப்போம்

தினத்தந்தி
|
25 Aug 2022 3:25 PM IST

தந்தையரை கருணையுடன் பார்ப்பதும், அன்னையரை கண் கலங்காமல் பாதுகாப்பதும் அன்பின் வெளிப்பாடாகும்.

நமது அன்பை பிறரிடம் வெளிப்படுத்துவது மூன்று விதங்களில் நடைபெறுகிறது. நமது அன்பை பிறர் மீது உணர்வுப்பூர்வமாக செலுத்தி, அதை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது. உதாரணமாக, சிறுகுழந்தையின் மீது நமக்கிருக்கும் அன்பை, கருணையை முத்தம் கொடுப்பதன் மூலமாக வெளிப்படுத்துகிறோம்.

'நபி (ஸல்) அவர்கள் தமது பேரன் ஹஸன் (ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அருகாமையில் அக்ரஃபின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர் 'எனக்கு பத்து குழந்தைகள் உண்டு. அவர்களில் எவரையும் நான் முத்தம் கொடுத்ததில்லை' என்பார். அவரை நபி (ஸல்) அவர்கள் உற்றுநோக்கி, 'எவர் அன்பு செலுத்தவில்லையோ அவர் அன்பு செலுத்தப்படமாட்டார்' என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

நாம் நமது சகோதரர், தோழரைக் கண்டதும் அவரிடம் கைகுலுக்கி, அவரை ஆரத்தழுவி அன்பை பகிர்ந்து கொள்கிறோம். நாம் நமது சகோதரனைப் பார்த்து புன்சிரிப்பு சிரிப் பதும் அன்பின் வெளிப்பாடாகும்.

'உன் சகோதரனைக் கண்டு புன்முறுவல் பூப்பதும் ஒரு தர்மமே, என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: திர்மிதி)

அனாதையின் தலையை வருடி விடுவதும் அன்பின் வெளிப்பாடாகும்.

"ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், தமது உள்ளம் கடினமாக இருப்பதாக முறையிட்டபோது 'அனாதையின் தலையைத் தடவிக் கொடுத்து வருவீராக, மேலும் ஏழைக்கு உணவு அளிப்பீராக' என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)

தந்தையரை கருணையுடன் பார்ப்பதும், அன்னையரை கண் கலங்காமல் பாதுகாப்பதும் அன்பின் வெளிப்பாடாகும்.

நமது அன்பை அறியாமை எனும் இருளை நீக்கி, அறிவொளி கொண்டு வளர்க்க வேண்டும். அறிவை, கல்வியை, ஒழுக்கத்தை, தொழில் நுட்பத்தை கல்வி இல்லாதோருக்கு கற்றுக்கொடுப்பதும் அறம் சார்ந்த அன்பாக உள்ளது.

நமது அன்பை பிறருக்கு பொருள் மூலமாக வெளிப்படுத்துவது 'அன்பளிப்பு' என்று கருதப் படுகிறது. அன்பளிப்பு என்றால் அன்பை அளிப்பது ஆகும். அன்பை வெளிப்படுத்தும் அடிப்படையில் பிரதிபலன், எதிர்பார்ப்பு இல்லாமல் வழங்கப்படுவது தான் அன்பளிப்பு. அதனை மதம் கடந்து, சாதி கடந்து யாரும் யாருக்கும் வழங்கலாம். யாரும் யாரிடமும் பெறலாம்.

"நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று, அதற்கு பதிலாக எதையாவது கொடுத்து ஈடுசெய்து வந்தார்கள்". (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

சிறிய அன்பளிப்பு எதுவாயினும் அதைக் கொடுப்போரும், வாங்குவோரும் இழிவாக பார்க்கக்கூடாது.

"நபி (ஸல்) அவர்கள் என்னிடம் 'அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்வீராக! உமது அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள்வீராக!' என்று கூறினார்கள்". (நூல்: முஸ்லிம்)

"உங்களுக்கிடையில் அன்பளிப்பை வழங்கிக் கொள்ளுங்கள். அதனால் நேசம் உண்டாகும். பகைமை நீங்கிவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்". (நூல்: முஅத்தா மாலிக்)

மேலும் செய்திகள்