இஸ்லாம்: இறைவனின் அழைப்பை ஏற்போம்...
|இஸ்லாம் என்ற சொல், பணிவையும் அடக்கத்தையும் குறிப்பதாகும். தன் ஐம்புலன்களையும் அடக்கி, இறை நியதிக்கு தன்னை ஆட்படுத்தி இறைவழியில் நடந்து, மனிதன் தன் வாழ்வில் சாந்தியையும், சமாதானத்தையும் பெற வேண்டும் என்பதற்கே இஸ்லாம் மார்க்கம் வழி காட்டுகிறது.
இஸ்லாம் ஏக இறைவனை "அல்லாஹ்" என்றே அழைக்கிறது. அரபி மொழியில் அல்லாஹ் என்ற இச்சொல் மிகவும் பழமை வாய்ந்தாகும். நபிகளார் பிறப்பதற்கு முன்பிருந்தே இச்சொல்லானது அரபுலகில் பயன்பாட்டில் இருந்ததுள்ளது. இதற்கு, நபிகளின் தந்தையின் பெயரே சிறந்த சான்றாக உள்ளது. அவர்களது பெயர் 'அப்துல்லாஹ்'. இதன் பொருள் 'அல்லாஹ்வின் அடிமை' என்பதாகும்.
இச்சொல் நாம் ஒருவரை மற்றவர் பெயரிட்டு அழைப்பதை போன்றதல்ல. இது எல்லையற்ற ஒரு மாபெரும் பேராற்றலை குறிக்கின்ற சொல்லாகும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
"உங்களுக்கு முன்சென்ற உத்தமர்களின் வழிமுறைகளை உங்களுக்கு விளக்கிடவும், அவ்வழிகளிலே உங்களை நடத்திச் செல்லவும் அல்லாஹ் விரும்புகின்றான். அவன் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்ப நாட்டம் கொண்டுள்ளான். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 4:126)
எந்த ஒன்றாலும் அல்லாஹ்வை சூழ்ந்து விடமுடியாது. ஆனால் அல்லாஹ்வோ எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து அறிபவனாக இருக்கின்றான். எனவே எல்லையற்ற அல்லாஹ் எந்த ஒரு அடையாளத்திற்குள்ளும் அகப்படுவதில்லை என்பதையே இந்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ் என்ற சொல் ஆண் பாலையோ, பெண் பாலையோ அல்லது இரண்டுமற்ற மூன்றாம் பாலையோ சாராத ஒரு தனித்த சொல்லாகும். அல்லாஹ் என்ற இச்சொல்லிற்கு பன்மை கிடையாது. மேலும் அல்லாஹ் என்கின்ற எழுத்திலுள்ள ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொன்றாக நீக்கிப் பார்த்தாலும் அச்சொல் அல்லாஹ்வின் வல்லமையை கூறுவதாகவே அமைந்துள்ளது.
அல்லாஹ் என்றால் யார் என்பது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:
"நபியே! மனிதர்களை நோக்கி, நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். அந்த அல்லாஹ் எவருடைய தேவையுமற்றவன். அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன. தவிர அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. நபியே நீர் உலக மக்களுக்கு கூறுவீராக". (திருக்குர்ஆன் 112:1-4)
"மனிதர்களே, இந்த நிலையற்ற வாழ்வின் மோகத்தில் நீங்கள் மயங்கிக் கிடக்கின்றீர்கள். அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கின்றான். நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது. தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான்". (திருக்குர்ஆன் 10:25)
மனிதன் தனது இறைவனை யார் என்று அறிந்து அவன் பூரண சாந்தியைப் பெற வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆன் இவ்வாறு மனிதர்களை அழைக்கின்றது. திருக்குர்ஆனின் இந்த அழைப்பை ஏற்று ஏக இறைவனின் வழியில் நடந்து இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் அருளைப்பெறுவோம், வாருங்கள்.