அமைதியை விரும்பும் அழகிய மார்க்கம் இஸ்லாம்
|இஸ்லாம் என்பது ‘ஸலாம்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். ‘ஸலாம்’ என்பதின் அர்த்தம்- அமைதி, சாந்தி, சாந்தம் என்பதாகும். ‘இஸ்லாம்’ என்பது அன்பு, அமைதி, சாந்தி நிறைந்த மார்க்கமாகும்..
இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநிறுத்தி, அதை நிறைவு செய்தவர் எல்லாம் வல்ல அல்லாஹ். அல்லாஹ்விற்கு 99 அழகிய திருநாமங்கள் உண்டு. அவற்றில் 'ஸலாம்' எனும் பெயரும் உண்டு. 'ஸலாம்' என்றால் "இறைவன் அமைதியானவன், அன்பானவன், சாந்தியளிப்பவன், சாந்தம் நிறைந்தவன்" என்பதாகும்.
"அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப் பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன். அவர்கள் இணைவைப்பவற்றை எல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்". (திருக்குர்ஆன் 59:23)
இஸ்லாமிய மார்க்கத்தை நிறுவியவர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார். அவரும் மக்கள் மீது அன்பு கொண்டவர். மக்கள் மத்தியில் அமைதியை பரப்பியவர். சாந்தமான மார்க்கத்தை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். சாந்தியை பொது உடைமையாக்கியவர்.
"உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முகம்மது) வந்துவிட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்". (திருக்குர்ஆன் 9:128)
இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்கள் 'முஸ்லிம்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள். 'முஸ்லிம்' என்பதன் பொருள்- 'அன்பானவர், அமைதியானவர், சாந்தியளிப்பவர், சாந்தமானவர்' என்பதாகும்.
"பிற முஸ்லிம்கள், எவருடைய நாவு மற்றும் கரம் ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து அமைதி பெறுகிறார்களோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே வாழ்த்துக் கூறும் வார்த்தையும் அன்பு, அமைதி, சாந்தி, சாந்தம் போன்ற அர்த்தத்தை தரும் வார்த்தையாகவே அமைகிறது. இந்த வாழ்த்துக் கூறும் முறை சொர்க்கத்தில் உருவானதாகும். சொர்க்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு சென்றபோது அவர்கள் முதற்கட்டமாக செயல்படுத்திய திட்டம் ஊரெங்கும் அன்பு, அமைதி, சாந்தியை நிலை நாட்டியதுதான்.
"மக்களே! அமைதியை பரப்புங்கள், பசித்தவருக்கு உணவளியுங்கள், உறவோடு சேர்ந்து வாழுங்கள், மக்கள் தூங்கும் இரவு நேரத்தில் இறைவனைத் தொழுது கொள்ளுங்கள். இதனால் சொர்க்கத்தில் அமைதியாக நுழைவீர்கள் என நபி (ஸல்) கூறினார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பேசிய முதல் பேச்சாக நான் செவிமடுத்தேன்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி), நூல்: இப்னுமாஜா)
சொர்க்கத்தின் பெயரும் 'தாருஸ் ஸலாம்' (அமைதி இல்லம்) என்பதாகும். சொர்க்கத்தில் அமைதி, சாந்தி எனும் சொல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும்.
"ஸலாம், ஸலாம் (அமைதி, சாந்தி) என்னும் சொல்லையே (சொர்க்கவாசிகள்) செவியுறுவார்கள்". (திருக்குர்ஆன் 56:26)
இறைவனும், இறைத்தூதரும், இஸ்லாமும், முஸ்லிம்களும், சொர்க்கமும், அங்கே கூறப்படும் வார்த்தையும் யாவுமே அன்பு, அமைதி, சாந்தி, சாந்தம் ஆகியவற்றை தருகின்றன.