< Back
ஆன்மிகம்
கலியுக கவலை போக்கும் இருளஞ்சேரி கலிங்கநாதீஸ்வரர்
ஆன்மிகம்

கலியுக கவலை போக்கும் இருளஞ்சேரி கலிங்கநாதீஸ்வரர்

தினத்தந்தி
|
22 Sept 2023 5:45 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது, தாயினும் நல்லாள் சமேத கலிங்கநாதீஸ்வரர் கோவில். கலியுகத்தின் பாவங்கள் நீங்கவும், கலிகால பாதிப்புகள் விலகவும், கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார், இங்குள்ள கலிங்கநாதீஸ்வரர்.

இத்தலம் அமைந்த இருளஞ்சேரி ஊரை, திருநாவுக்கரசர் தன்னுடைய ஊர்த் தொகைப் பாடலில் 'இறையாஞ்சேரி' என்று குறிப்பிட்டுள்ளார்.

கி.பி.10-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் கண்டறியப்பட்டு இருப்பதால், இது சோழர் காலத்திய கோவில் என்பதை அறிய முடிகிறது. கல்வெட்டு செய்திகள் மூலம் கி.பி.12-ம் நூற்றாண்டில், இக்கோவிலின் ஸ்ரீ வருகபிள்ளையார் சன்னிதியை, இருங்களூரைச் சேர்ந்த அமர யுத்த கோவன் எனப்படும் திருவிற்கோலமுடையான் என்பவர் கட்டியதாகத் தெரிகிறது. இதே போல, இருங்களூரில் வசித்த சிந்தனையுடையாள் என்ற பெண்மணி தன் கணவன் தியாக மேகம் என்பவரின் நினைவாக ஆலயத்திற்கு விளக்கு தானம் வழங்கிய செய்தியும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இத்தல இறைவனான கலிங்கநாதீஸ்வரரின், ஆதிகாலப் பெயர் 'கலியஞ்சீஸ்வர மகாதேவர்' என்பதாகும். இப்பெயரை மண்டபத்தின் மேற்கு பகுதி சுவரில் காணப்படும் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. இக்கல்வெட்டு 18, அக்டோபர் 1237-ல் ராஜராஜதேவன் எனப்படும் மூன்றாம் ராஜராஜனின் 22-ம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கலியுகத்திற்கு அஞ்சுவோருக்கு அபயம் தந்தருளும் இறைவன் என்பதால், 'கலியஞ்சீஸ்வரன்' எனப் பெயர் பெற்றார். கலியஞ்சீஸ்வரனே மருவி கலிங்கநாதீஸ்வரர் என்று ஆனதாக சொல்லப்படுகிறது.

சனிப் பிரதோஷத்தில் தொடங்கி, தொடர்ந்து ஏழு பிரதோஷங்கள் இறைவனை வழிபடுவோருக்கு ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, பாதச்சனி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளும் அகலும். அத்துடன் கலிகால கஷ்டங்களும் நீங்கி விடும் என்பது அடியார்களின் நம்பிக்கை. இத்தல இறைவி, தாய்க்கு தாயாக விளங்குகிறார். இத்தல அம்மனின் பெயரான 'தாயினும் நல்லாள்' என்ற பெயர், வேறு எந்த சிவாலயத்திலும் அம்மன் கோவில்களிலும் காண முடியாத பெயராக உள்ளது. இக்கோவிலின் எதிரே பிரமாண்ட திருக்குளம் அமைந்துள்ளது. இது 'சங்கு தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது.

கி.பி.1943-ல் கூவம் ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் படித்துறைகள் மண்ணில் புதைந்து சிதிலமடைந்துள்ளது. புனரமைத்தால் மீண்டும் புது பொலிவு பெரும்.

இவ்வாலயத்தினை ஒட்டி மேற்புறத்தில் ஸ்ரீ தேவர்சிங்க ஆதீன திருமடம் ஒன்றும், அதன் அருகே இம்மடத்தை நிறுவிய முதல் குருவான ஸ்ரீ அழகிய திருச்சிற்றம்பல பரமாச்சரிய சுவாமிகளின் ஜீவ சமாதியும், சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவர் ஆனி மாதம் வளர்பிறை சப்தமி திதி அன்று கபாலம் திறந்து இறையருள் பெற்றவர். இந்த ஆதீனத்தின் வழி வந்த முதலாவது சிதம்பர சுவாமிகள் பாடிய 'கலிங்கேசன் பதிற்றுப்பத்து அந்தாதி' இறைவனின் திருப்புகழை 101 பாடல்களால் வெளிப்படுத்துகிறது. இப்பாடல்களில் சில பாடல்கள் மட்டும் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஆலய அமைப்பு

ஆலயம் சிறிய அளவில் தெற்கு முகமாய் எதிரே திருக்குளத்துடன் அமைந்துள்ளது. இறைவன் கிழக்கு முகமாய் காட்சி தர, இறைவி தென்திசை நோக்கி அருள்கிறார். கோபுரத்தின் கீழ்ப்புறத்தில் நான்கு பக்கமும் சிங்கமுக உருவங்களும், நால்வரது சிற்பங்களும் கருங்கல்லில் அமைந்துள்ளன. கலி அஞ்சி அபயம் தந்த நாதர் என்பதால் நவக்கிரக சன்னிதிக்கு இங்கு இடமில்லை. கோபுரத்தின் கீழே குபேரன், நடராஜர், ரம்பா, ஊர்வசி போன்ற சிற்பங்களும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாலய நந்தி தேவர் மிகவும் சிறப்பானவர். இவரது வலது கண் சூரியன் வடிவத்திலும், இடது கண் சந்திர வடிவத்திலும் அமைந்துள்ளது. இது வேறெங்கும் காண முடியாத சிறப்பு. இவரின் பீடத்தில் காணப்படும் கல்வெட்டின் வாயிலாக இந்த ஆலயம் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது உறுதிப்படுகிறது. இவ்வாலயத்தின் சிறப்பே பிரதோஷம் தான்.

சோழர் காலத்தில் இருங்களூர் என்றும், திருநாவுக்கரசர் காலத்தில் இறையாஞ்சேரி என்றும், தற்காலத்தில் இருளஞ்சேரி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இத்தல இறைவனை வழிபட்டால் கயிலைநாதனைக் காணலாம் என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் பாடுகின்றார். அழகிய திருச்சிற்றம்பலத்திற்கு அருளியதாலும் இது ஒரு முக்தி தலம். காசிக்கு சமமான ஊர் என்றும் போற்றப்படுகிறது. இதே போல, ஸ்ரீ தேவர்சிங்க ஆதீன மடத்தின் பரம்பரை வழி வந்த முதலாவது சிதம்பர ஸ்வாமிகளின் பதிற்றுப்பத்து அந்தாதி பாடல்களும் இறைவனை புகழ்ந்து பாடுகின்றன. கோவிலில் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் 12 மணி வரை கோவில் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

கோவிலுக்கு செல்ல சென்னை மார்க்கத்தில் இருந்து பூந்தமல்லி வழியாக அரக்கோணம் மார்க்கத்தில் பேரம்பாக்கம் வந்தடைந்து. பேரம்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம். ரெயில் மார்க்கமாக வருபவர்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, கடம்பத்தூரில் இருந்து பேரம்பாக்கம் வந்தடைந்து, பின்னர் ஆட்டோ மூலமாக கோவிலை அடையலாம்.

மேலும் செய்திகள்