< Back
ஆன்மிகம்
இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
ஆன்மிகம்

சித்தர் ஐக்கியமான இடத்தில் கோவில் கொண்ட அம்மன்

தினத்தந்தி
|
14 Aug 2024 6:04 PM IST

சிவயோக ஞானசித்தர் ஐக்கியமான இடத்தில்தான் இருக்கன்குடி மாரியம்மனின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பாக தென் தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகிய சதுரகிரி மலையில் சிவயோக ஞானசித்தர் என்ற தவயோகி கடும் தவம் மேற்கொண்டு, அன்னை பராசக்தியிடம், தான் யோக நிஷ்டையாகும் (ஐக்கியம்) இடத்தில் அன்னை பராசக்தி சிவசொரூபியாக பீடமிட்டு அமர்ந்து அருள் பாலிக்க வேண்டும் என்ற அரிய வரம் பெற்றார்.

நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் ஐக்கியமாக வேண்டும் என்ற அன்னை பராசக்தியின் வார்த்தைகளை ஏற்று அங்கிருந்து நதிகள் சங்கமம் ஆகின்ற இத்திருத்தலத்தைத் தேர்வு செய்து இவ்விடத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் நாடெங்கும் ஊழிப்பிரளயம் ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தால் நாட்டின் பல கிராமங்கள் அழிந்தன. அந்தப் பெரு வெள்ளத்தில் மிதந்து வந்த அன்னை பராசக்தியின் திருவுருவச்சிலை, சித்தர் ஐக்கியமாகிய இவ்விடத்தை அடைந்ததும் வெள்ளத்திலிருந்து விடுபட்டு சுழலெடுத்து பூமிக்குள் புதைந்து கொண்டது.

அர்ச்சுனா நதியின் கரையிலிருக்கும் இருக்கன்குடி கிராமப் பெண்கள் வழக்கம் போல் சாணம் சேகரித்துவிட்டு, சாணக்கூடையை தலைக்குத் தூக்க முயற்சிக்கும்போது, இத்திருக்கோயிலின் தற்போதைய பரம்பரை அறங்காவலர்கள் / பூசாரிகளின் குடும்பத்தைச் சார்ந்த மூதாதையராகிய இராமசாமி பிள்ளை என்பவரின் மனைவி பரிபூரணத்தம்மாள் என்ற பெண்ணின் சாணக்கூடையை மட்டும் தரையிலிருந்து எடுக்க முடியவில்லை. சாணத்தையெல்லாம் பரிபூரணத்தம்மாள் அகற்றிய பிறகும் கூடையை எடுக்க முடியவில்லை. அனைவரும் அதிர்ச்சியோடு நிற்க, அந்தப் பெண்ணுக்கு அருள் வந்து அன்னை பூமிக்குள் புதைந்திருக்கும் வரலாற்றைச் சொல்லி, 'நான் மாரியம்மா, என்னைத் தோண்டியெடுத்து வழிபட்டு வந்தால் கைவிடாமல் காப்பாற்றுவேன்' என்று கூறினார்.

இதையடுத்து அங்கு புதையுண்டிருந்த அம்மனை பொதுமக்கள் வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.

சிவயோக ஞானசித்தர் ஐக்கியமான இடத்தில்தான் இருக்கன்குடி மாரியம்மனின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இப்போதும் சிவயோக ஞானசித்தர் அருவுருவமாக வந்து தினம் தினம் அன்னை பராசக்தியை வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்