< Back
ஆன்மிகம்
இந்தோனேசியாவின் பிரம்மாண்டம்
ஆன்மிகம்

இந்தோனேசியாவின் பிரம்மாண்டம்

தினத்தந்தி
|
9 May 2023 8:12 PM IST

கம்போடியாவில் அமைந்த அங்கோர்வாட் ஆலயத்தைப் போலவே, இந்தோனேசியாவில் யாவாப் பகுதியில் அமைந்த மிகப் பிரமாண்டமான ஆலயம் ‘பிரம்பானான் கோவில்’ ஆகும். 9-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த கோவில், உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றாக, யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் மைய விமானம் 47 மீட்டர் (154 அடி) உயரம் கொண்டது. இது தெற்காசியாவின் மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாக இருப்பதுடன், ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் அமைந்துள்ளது. மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாக இது இருக்கிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் இது சிவபெருமானுக்காக கட்டப்பட்ட ஆலயமாகவே இருந்துள்ளது. அக்காலத்தில் 'சிவக்கிரகம்' என்று அழைக்கப்பட்ட இந்த ஆலயம், 856-ம் ஆண்டுகளுக்கு பின்னர் சிவன் ஆலயத்திற்கு இருபுறமும் விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கான ஆலயம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தை சஞ்சய வம்சத்தைச் சேர்ந்த ராகாய் பிகாதன் என்ற மன்னன் கட்டியதாக சொல்லப்படுகிறது. பிகாதனால் 850-களில் தொடங்கப்பட்ட இந்த பிரமாண்ட ஆலயத்தின் கட்டுமானம், அவனுக்குப் பின்னர் லோகபாலன், பாலிதுங் மகாசம்பு போன்ற மன்னர்களாலும் தொடரப்பட்டு, அதன்பின்னரே முடிவுக்கு வந்துள்ளது. மேலும் தட்சன், துலோதுங் முதலான பிற்கால மன்னர்களால் விரிவாக்கமும் பெற்றிருக்கிறது.

930-களில் ஆட்சி மாற்றம் மற்றும் தலைநகர் மாற்றங்களால் இந்த ஆலயம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. 11-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு இயற்கை சீற்றத்தால் பெரும் சேதத்தையும் இந்த ஆலயம் சந்தித்தது. நாளடைவில் வனாந்திரமாக மாறிப்போனது இந்த இடம். சிதைந்துபோன அந்த பிரம்மாண்ட ஆலயம் பற்றி அந்த வனத்திற்குள் வாழ்ந்த மக்கள் அறிந்திருந்தாலும், அதன் வரலாற்று முக்கியத்துவம் தெரியவில்லை. அதனால் உடைந்து கிடந்த சிற்பங்களையும், கற்களையும் எடுத்துச் சென்று அலங்காரப் பொருட்கள், கட்டுமானங்கள் ஏற்படுத்த பயன்படுத்தினர்.

1918-ம் ஆண்டு, இவ்வாலயத்தின் எஞ்சிய சிதைவுகளைப் பாதுகாத்து சீரமைக்கும் பணியை, அப்போது சாவகத்தை ஆண்ட டச்சு அரசு ஆரம்பித்தது. 1953-ல், பிரதான ஆலயமான சிவன் கோவில் முழுவதும் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. பழங்காலத்தில் இந்த பிரம்பானான் ஆலய வளாகத்தில் 240 பரிவார கோவில்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர, மற்ற அனைத்தும் சிதைந்து போய்விட்டன.

இந்த வளாகத்தில் மும்மூர்த்தி கோவில்கள், நந்தி, கருடன், அன்னம் ஆகிய வாகனங்களுக்கான சன்னிதிகள், உள் வீதியின் நான்கு வாசல்களை இணைக்கும் வகையிலான சிற்றாலயங்கள், உள் வீதியின் நான்கு மூலைகளிலும் அமைந்த பிற தெய்வங்களின் சன்னிதிகள், 224 பரிவார கோவில்கள் ஆகியவை இருந்திருக்கின்றன.

மும்மூர்த்திகளுக்கான மூன்று கோவில்களில், பழமையானதும், உயரமானதும், பெரியதும், நடுநாயகமாக இருப்பது சிவன் கோவிலாகும். இதன் சுற்றுப் பிரகாரத்தில், ராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். ஆலயத்தின் நடுவில் 3 மீட்டர் உயரத்தில் சிவபெருமான் கம்பீரமாக நிற்கிறார். அதைச் சுற்றியுள்ள மூன்று கோட்டங்களில், கணேசன், துர்க்கை, அகத்தியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள துர்க்காதேவி, சிவன் கோவிலுக்கு முன்னுள்ள நந்தி வாகனக் கோவிலில், சந்திரன், சூரியன் ஆகியோருக்கும் சிற்பங்கள் உள்ளன.

இந்தோனேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, பிரம்பானான் கோவில் திகழ்கின்றது. யாவா மற்றும் பாலி இந்துக்கள் தம் சமயச் சடங்குகளைப் பிரம்பானான் பகுதியில் தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்