கண்களைக் கவரும் பாலி கோவில்கள்
|இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலியில் இந்து சமய கோவில்கள் பல இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் கண்களைக் கவருவதாகவும், பக்தி பரவசத்தை அளிப்பதாகவும் அமைந்திருக்கின்றன. அவற்றில் சில கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
பெசாகி கோவில்
பாலியில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும், இந்த பெசாகி கோவில் புனிதம் நிறைந்ததாக கருதப்படுகிறது. பெசாகி தீவில் மிகப்பெரிய வளாகத்துடன் அமைந்த ஆலயம் இது. இந்தக் கோவிலை அடைய நுழைவு வாசலில் கீழிருந்து, மேல்நோக்கி அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள், நம்மை சொர்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஏணி போன்ற உணர்வைத் தருவதாக இருக்கிறது. அகுங் மலையின் சரிவுகளில் அமைந்துள்ள இந்தக் கோவில், இங்கு வரும் அனைவரையும் வியக்க வைக்கும். பாலியில் உள்ள மிகப் பிரபலமான கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் நாக பெசுகியன் என்ற தெய்வத்தை முக்கிய தெய்வமாக வழிபடுகிறார்கள். இவ்வாலயத்தில் உள்ள மலைகள், கோவிலைச் சுற்றி அமைந்திருக்கும் நீரோடைகளின் அற்புதக் காட்சி உங்களை இங்கு மீண்டும் மீண்டும் வரவழைக்கும். இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
தீர்த்த எம்புல்
பாலியில் உள்ள மிகப்பெரிய நீர் கோவில்களில் ஒன்றாக, தீர்த்த எம்புல் திகழ்கிறது. இது இங்குள்ள புனித நீருக்கு பிரபலமானது. பாலியில் உள்ள இந்து சமய மக்கள் பலரும் இந்த புனித நீரையே, பல சடங்குகளுக்கும் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. மேலும் கோவில் விழாக்கள் பலவற்றுக்கும் இந்த புனித நீர் கொண்டு சென்று பயன்படுத்தப்படுகிறது. கோவிலின் நுழைவு வாசலில் பசுமையான தோட்டங்கள் மற்றும் வெப்பமண்டல தாவரங்களுக்கு மத்தியில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாசலுக்கு பின்னால் அமைந்துள்ள குளங்கள், அழகிய இயற்கை காட்சியைப் போல் காணப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள், புனிதத்துவம் நிறைந்த இங்குள்ள நீரில் நீராடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இங்கே விஷ்ணு முக்கியமான தெய்வமாக வழிபடப்படுகிறார். இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
உளுன் டானு பெரடன் கோவில்
இந்த ஆலயத்தை 'ஏரியின் சொர்க்கம்' என்றும் அழைக்கிறார்கள். ஏனெனில் இது பெரடன் என்ற ஏரியின் மேற்குப் பகுதியில் மிதக்கும் கோவிலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாலியின் அழகிய அடையாளமாகவும், இங்கு வருகை தருபவர்களின் பொழுதுபோக்கு இடமாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் கட்டமைப்பு கண்களை கவருவதாக அமைந்திருக்கும். அதே வேளையில், இங்குள்ள குளிர்ச்சியான சூழல் மற்றும் நேர்மறை அதிர்வுகள் போன்றவை இங்கு வருபவர்களின் மனம், உடல் மற்றும் ஆன்மாவை புத்துயிர் பெறச்செய்வதாக இருக்கிறது. இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலியில் இருக்கும் கோவில்களிலேயே மிகவும் அமைதியான கோவிலாக இது திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சிவபெருமான் வழிபாடு முக்கியமானதாக உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் விழா எடுக்கப்படுகிறது. இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
தனா லாட் கோவில்
அனைத்து பாலி கோவில்களிலும், தனா லாட் கோவில் மிகவும் பிரபலமானது. கடலின் உள்ளே அமைந்த ஒரு மலைப் பாறையில் அமைந்த இந்த அழகிய கோவில், சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக சிறப்பான காட்சியமைப்பை உருவாக்கி தருகிறது. இதற்காகவே இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில், குலதெய்வ யாத்திரை அணிவகுப்பு என்பது வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆலயத்தின் முக்கியமான தெய்வமாக, 'தேவா பாருனா' என்ற தெய்வம் வழிபடப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7மணி வரை திறந்திருக்கும்.
கோவா கஜா
பாலியில் உள்ள கோவில்களை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அந்தப் பட்டியலில் இந்த 'கோவா கஜா' கோவிலையும் இணைத்தே ஆக வேண்டும். இந்தக் கோவிலில் முக்கிய தெய்வமாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்கிறார்கள். இந்தக் கோவில் அமைந்த மலைப்பகுதியில் ஆன்மிக தியானத்திற்காக கட்டப்பட்டுள்ள, பழமையான குகை ஒன்று உங்களின் மனதை சாந்தப்படுத்தும். இந்தக் குகை பாலியின் குறிப்பிடத்தக்க வரலாற்றை அறியவும், தனித்துவமான காட்சிகளை கண்டு அனுபவிப்பதற்கும் சிறப்பானது. இங்குள்ள நினைவுச்சின்னங்கள், தியானக் குகை, பாறை சுவர் சிற்பங்கள் போன்றவை இங்கு வருபவர்களை கவரும் அம்சங்களாகும். இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.