ஈரோடு
கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு
|கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு நடந்தது.
கோவில்களில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோபி
கோபியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது. கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரம் சரமாக வளையல்கள் சாத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் வளையல்கள், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.இதேபோல் கோபி மாதேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு நடந்தது.இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் அன்னதானத்தை தொடங்கிவைத்தார்.
சென்னிமலை
சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி திரளான பெண்கள் மாரியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களாக கொண்டு வந்த முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல்கள், கனி வகைகள், இனிப்புகள் மற்றும் மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
முன்னதாக மேள, தாளங்கள் முழங்க பெண்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஆதி விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர் பெண்கள் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவு வகைகளை மாரியம்மன் கோவிலில் ஒருவருக்கொருவர் பங்கிட்டு உண்டு மகிழ்ந்தார்கள்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே உள்ள கருமாண்டாம்பாளையத்தில் பழமையான மாயவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாக பூஜையில் வைக்கப்பட்டு இருந்த கலசங்களில் இருந்த புனித நீரால் மாயவர் மற்றும் சீதேவி, பூதேவி அம்மனுக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூரில் உள்ள புகழ்பெற்ற பேட்டை பெருமாள் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பட்டுப்புடவையிலும், பெருமாள் பட்டு வஸ்திரத்திலும் காட்சி அளித்தார். வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பவுடர், கண்ணாடி வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பெண்களுக்கு மஞ்சள் கயிறும், வளையலும் வழங்கப்பட்டது.
இதேபோல் கோட்டை பெருமாள் கோவிலிலும் ஆடிப்பூர சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்தியூர், தவிட்டுப்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், ஒலகடம் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.
கைலாசநாதர் கோவில்
சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
அதேபோல் சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் உள்ள நர்மதை மருந்தீஸ்வரர் கோவிலில் கோவில் நிர்வாகி சரவண சாமிகள் தலைமைகள் நர்மதை மருந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பூரம் கடந்த மாதம் 28-ந் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று காலை லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கொடுமுடி ஏமகண்டனூரில் பிரசித்தி பெற்ற ஆட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி மகா சண்டி யாகம் நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. பின்னர் மகா சண்டியாகம் நடைபெற்றது. இதையொட்டி ஆட்சியம்மனை கொடுமுடி காவிரியில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.