ஈரோடு
சத்தியமங்கலத்தில் பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா
|சத்தியமங்கலத்தில் பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா வந்தது. அப்போது தேங்காய் பழம் படைத்து அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா வந்தது. அப்போது தேங்காய் பழம் படைத்து அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் ேததி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
மறுநாள் 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமங்களுக்கு வீதி உலாவாக புறப்பட்டனர். பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் சப்பர ஊர்வலம் சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம், இக்கரை நெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், அக்கரை தத்தப்பள்ளி, உத்தண்டியூர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், திருவள்ளுவர் நகர் வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சத்தியமங்கலம் எல்லையான கோம்புபள்ளம் பகுதியை வந்தடைந்தது.
தாரை, தப்பட்டை முழங்க...
அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பண்ணாரி அம்மனை தாரை தப்பட்டை முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க பக்தி பரவசத்துடன் வரவேற்றனர். மேலும் சத்தி வடக்குப்பேட்டையை சேர்ந்த இளைஞர்கள் அம்மன் சப்பரத்துடன் வந்த பூசாரி, சப்பரத்தை தூக்கி வந்த பக்தர்கள், தாரை, தப்பட்டை, மங்கள வாத்தியம், பீனாட்சி வாத்திய கலைஞர்கள் மற்றும் சப்பரத்துடன் வந்த பக்தர்கள் அனைவருக்கும் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூக்கள் வைத்து வழிபட்டனர். இதையடுத்து அம்மன் சப்பரம் அங்கிருந்து வீதி உலாவாக புறப்பட்டு கோட்டூவீராம்பாளையம், கடைவீதி, சத்யா ரோடு வழியாக வடக்குப்பேட்டையில் உள்ள பண்ணாரி அம்மனின் அக்கா என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. அம்மன் வீதி உலா வந்த கோம்புபள்ளம் முதல் வடக்குப்பேட்டை வரை உள்ள 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் ரோடு முழுவதும் தண்ணீர் ஊற்றி பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அம்மனின் சப்பரம் அங்கேயே தங்க வைக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தில் வீதி உலா
இதைத்தொடர்ந்து நேற்று காலை பண்ணாரி மாரியம்மன் சப்பரம், பக்தர்கள் புடை சூழ தண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்குப்பேட்டை, கிட்டேகவுடர் வீதி, சந்தன டிப்போ வீதி, குலாலர் வீதி, சத்யா தியேட்டர் வழியாக கடைவீதி மற்றும் அக்ரகாரம் வந்து இரவில் கடை வீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் தங்க வைக்கப்பட்டது.
நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கம்பம் சாட்டு விழா நடைபெறுகிறது. வருகிற 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு குண்டம் விழா நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். 5-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். இதில் பெண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பின்னர் இரவு புஷ்பரதத்தில் சிம்ம வாகனத்தில் கோவிலை சுற்றி அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி தங்க ரதம் புறப்பாடும், 10-ந் தேதி மறுபூஜை விழாவும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மேனகா, கோவில் பணியாளர்கள், அலுவலர்கள், பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.