< Back
ஆன்மிகம்
தீங்கைக் காணமாட்டீர்கள்!
ஆன்மிகம்

தீங்கைக் காணமாட்டீர்கள்!

தினத்தந்தி
|
16 Feb 2023 8:03 PM IST

தேவன் உங்கள் நடுவில் இருப்பார் என்றால், அது உங்களுக்கு பாதுகாப்பாயிருக்கும். தேவன் எப்போதும் உங்களுடைய வாழ்க்கையின் மத்தியில் இருக்கட்டும்.

"கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்" (செப் 3:15).

தேவன் உங்கள் நடுவில் இருக்கிறார். அவர் உங்கள் ஆக்கினைகளை அகற்றி, உங்களுக்கு வருகிற துன்பங்களை மாற்றி, உங்களுடைய சத்துருக்களை விலக்கிவிட்டார். ஆகவே நீங்கள் இனி தீங்கைக் காணமாட்டீர்கள். தேவன் உங்கள் நடுவில் இருப்பார் என்றால், அது உங்களுக்கு பாதுகாப்பாயிருக்கும்.

ஒருவன் குளத்தில் விழுந்துவிட்டால், அவன் அருகிலே நீச்சல் தெரிந்த ஒருவன் இருப்பானென்றால், உடனே கிணற்றில் குதித்து அவனைக் காப்பாற்றிவிடுவான். அதுபோல எத்தனை சத்துருக்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பி வந்தாலும், பலசாலியாகிய தேவன் உங்களோடு இருப்பாரானால், சத்துருக்களின் நடுவில் இருந்து உங்களை மீட்டு இரட்சிப்பார், உங்களைக் காப்பாற்றுவார். ஆகவே பதற்றம் கொள்ள வேண்டாம். தேவன் உங்கள் நடுவில் இருக்கிறாரா? என்பதை மட்டும் சிந்தித்துப்பாருங்கள்.

வேதம் சொல்லுகிறது, "அவர் உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார். அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" (செப். 3:17).

"என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை" (யோவே. 2:27) என்று தேவன் சொல்லுகிறார். தேவன் உங்கள் நடுவில் இருப்பாரானால், நீங்கள் ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை. சாத்தான் யோபுவுக்கு சோதனைகளை கொண்டு வந்து வெட்கப்படுத்த நினைத்தான். ஆனால் கடைசியில் யோபு சோதனைகளில் எல்லாம் வெற்றிபெற்றார். இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார். அவருக்கு மறுபடியும் பத்து அழகான பிள்ளைகள் பிறந்தார்கள். அவர் கிழக்கத்திய புத்திரரில் மிகவும் பிரசித்திப்பெற்ற மனிதனாய் விளங்கினார்.

கர்த்தர் சொல்லுகிறார், "கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம் பண்ணுவேன்" (சகரி. 2:10,11).

கர்த்தர் உங்களுடைய நடுவில் வாசம் பண்ணுவாரானால், உங்களுக்கு பெரிய சந்தோஷமும், கெம்பீரமுமாய் இருக்கும். நீங்கள் நிமிர்ந்து நடப்பீர்கள். நீங்கள் ஒருநாளும் தலைகுனிவதில்லை.

ஒருபோதும் உங்களுடைய கால்கள் தள்ளாடுவதில்லை. ஒருபோதும் நீங்கள் தாழ்ச்சியடைவதில்லை. குறைவுபட்டுப் போவதுமில்லை. சிங்கக்குட்டிகள் ஒருவேளை தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கக்கூடும். ஆண்டவரை நம்புகிறவர்களுக்கு ஒருபோதும் குறைவு இருப்பதில்லை.

அவர் உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணுகிற தேவன். முட்செடியிலே அக்கினியோடு இறங்கி வந்த ஆண்டவர், உங்களுடைய குடும்பத்தை தம்முடைய பிரசன்னத்தினாலும், மகிமையினாலும் நிரப்ப விரும்புகிறார். பிரியமானவர்களே, தேவன் எப்போதும் உங்களுடைய வாழ்க்கையின் மத்தியில் இருக்கட்டும்.

அப்பொழுது கிருபை மேல் கிருபையைப் பெற்றுக்கொள்வீர்கள். பலத்தின் மேல் பலனடைவீர்கள். மகிமையின் மேல் மகிமையைப் பெற்றுக்கொள்வீர்கள்.

மேலும் செய்திகள்