மனிதர்களை செல்வத்தைக் கொண்டு சோதிப்பேன்- இறைவனின் வாக்கு
|தன்னை முழுமையாக நம்புபவர்களுக்கு, அவர்கள் நினைக்காத நேரத்தில் தேவைக்கும் அதிகமான செல்வத்தை இறைவன் அருள்வான்.
அந்த ஊரில் மிகப்பெரிய செல்வந்தர் இருந்தார். அவர் சிறந்த ஆன்மிக வாதியும் ஆவார். அவருக்கென்று யாரும் இல்லை. எனவே அவர் தன்னுடைய சொத்துக்களை எல்லாம், தன்னுடைய வீட்டில் வேலை பார்த்து வருபவர்களுக்கு அளித்து விட்டு, ஒரு மடாலயம் அமைத்து, அதில் ஆதரவற்றோர் களையும், முதியவர்களையும் தங்கவைத்து தான தர்மங்கள் செய்ய முடிவு செய்திருந்தார். அதே நேரம் பணத்தை விட, இறைவனின் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நபர், அவருக்கு ஒத்தாசையாக வேண்டும் என்று நினைத்தார். அந்த நபரை, தன்னுடைய வேலையாட்களில் இருந்தே தேர்வு செய்ய அவர் முடிவு செய்தார்.
அதன்படி தன்னுடைய முடிவு எதையும் வெளியில் சொல்லாமல், தன்னிடம் வேலை பார்க்கும் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டினார். 20-க்கும் மேற்பட்ட வேலையாட்கள் அந்த இடத்தில் கூடினர். அவர்கள் அனைவரும் வரிசையாக நிறுத்தப்பட்டு, அவர்கள் ஒவ்வொரின் முன்பாகவும் ஒரு மேஜை போடப்பட்டது. அதன் மேல் இரண்டு அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றின் மீது 'பணம்' என்றும், மற்றொன்றின் மீது 'ராமாயண புத்தகம்' என்றும் எழுதப்பட்டிருந்தது.
இப்போது செல்வந்தர் பேசினார். "அன்பானவர்களே.. நீங்கள் எனக்காக இதுவரை உண்மையாக உழைத்துள்ளீர்கள். அதற்கேற்ற சம்பளத்தை விடவும் அதிகமாகவே நான் உங்களுக்கு கொடுத்து வந்துள்ளேன். என்னிடம் உள்ள செல்வம் அனைத்தும் இறைவன் அருளால் கிடைத்தது. அவற்றிற்கு நான் ஆண்டவனிடம் கணக்கு காட்ட வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது.
உங்கள் முன்பாக இரண்டு பெட்டிகள் இருக்கின்றன. ஒன்றில் பணமும், மற்றொன்றில் இறைவனின் புகழைப்பாடும் ராமாயண புத்தகமும் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நான் உங்களை குறைவாக மதிப்பிடமாட்டேன். உங்களின் விருப்பமே எனக்கு முக்கியம்" என்றார்.
பணியாளில் ஒருவர், "முதலாளி.. நீங்கள் இதுவரை எங்களுக்கு எந்தக் குறையும் வைக்க வில்லை. ஆனாலும் இப்போதைக்கு நோய் பாதிப்பில் தவிக்கும் என் தாய்க்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்படுகிறது. நான் ராமாயணத்தை மதிக்கிறேன். என்றாலும் தேவை என்பதால் பணத்தை எடுத்துக் கொள்கிறேன்" என்றபடி பணப்பெட்டியை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டார்.
இரண்டாவது ஒருவர், "ஐயா.. நான் ஓலை குடிசையில் வசிக்கிறேன். என்னுடைய பிள்ளைகளாவது கல் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக இந்த பணத்தை எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.
இப்படியே ஒவ்வொருவரும் தங்களின் தேவைகளைச் சொல்லி, பணத்தையே எடுத்துக் கொண்டனர்.
இப்போது ஒரு வாலிபன் மட்டும் எஞ்சியிருந்தான். அங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரை விடவும், அவனது குடும்பமே மிகவும் ஏழ்மையில் இருந்தது. வயதான தாய், தந்தையர், திருமணமாகாத நிலையில் இரண்டு சகோதரிகள் என்று, அவன் கடமையை முடிக்கவும் பணம் தேவையாகவே இருந்தது. அதனால் அவனும் பணப்பெட்டியையே கையில் எடுத்தான்.
செல்வந்தரின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போனது. பணப்பெட்டியை கையில் வைத்தபடி அந்த இளைஞன் பேசினான். "முதலாளி.. என்னுடைய அம்மா தினமும் அதிகாலையில், என்னையும், என் சகோதரிகளையும் அமரவைத்து, தான் சிறு வயதில் கேட்ட ராமாயணக் கதைகளை எங்களுக்குச் சொல்வார். நாங்கள் அதைக் கேட்டு இன்புறுவோம். ஒரு முறை என் தாய் சொன்ன வாசகம் எனக்கு நினைவிருக்கிறது. 'ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதுதான். நமக்கு என்ன தேவையோ, அதை நிறைவேற்றுபவனாக இறைவன் இருக்கிறான்' என்றார். என் குடும்ப சூழ்நிலைக்கு இப்போது பணம் தேவைதான். என்றாலும் நான் எப்போது கேட்டாலும், நீங்கள் 'இல்லை' என்று சொல்லாமல் பணம் தரப்போகிறீர்கள். எனவே இப்போது எனக்கு பணத்தை விட, ராமாயண புத்தகத்தின் மீதுதான் பற்று எழுகிறது" என்று கூறி, பணப்பெட்டியை கீழே வைத்து விட்டு, ராமாயண புத்தகம் இருந்த பெட்டியை எடுத்தான்.
பின்னர் புத்தகத்தைப் பார்க்கும் ஆவலில் அந்தப் பெட்டியைத் திறந்தான் வாலிபன். அதில் புத்தகத்தோடு மேலும் இரண்டு கவர்கள் இருந்தன. ஒன்றில் அளவுக்கு அதிகமான பணமும், மற்றொன்றில் செல்வந்தரின் சொத்தில் பாதி எழுதப்பட்ட உயிலும் இருந்தது. அதைக் கண்டு அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அனைத்து பணியாளர்களுக்குமே அதிர்ச்சி. ஆனால் செல்வந்தருக்கோ, தனக்கு நம்பிக்கையான ஒரு துணைவன் கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி.
தன்னை முழுமையாக நம்புபவர்களுக்கு, அவர்கள் நினைக்காத நேரத்தில் தேவைக்கும் அதிகமான செல்வத்தை இறைவன் அருள்வான். அதுதான் அந்த இளைஞனின் விஷயத்தில் நடந்தது. 'மனிதர்களை, செல்வத்தைக் கொண்டு சோதிப்பேன்' என்பது இறைவனின் வாக்கு. அந்த சோதனையில் செல்வத்தின் பக்கம் சாயாதவனுக்கு, அவன் எதிர்பாராத செல்வம் கிடைக்கும்.