ஓய்வு நாளில், ஓய்வின்றி இருப்போம் - இயேசு
|ஓய்வு நாட்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது எனக் கூறினார் இயேசு.
சிலர் ஒருவரை கட்டிலில் தூக்கிக் கொண்டு இயேசுவிடம் வந்து குணமாக்கும்படி மன்றாடினார்கள். இயேசு "நீர் உம் கட்டிலை எடுத்துக் கொண்டு செல்லும்" எனக் கூறினார். அவர் எழுந்து படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.
மக்கள் வியப்படைய, யூதர்களுக்கோ அவரை குற்றம் சாட்ட அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. காரணம் அது ஒரு ஓய்வு நாள்.
ஓய்வு நாளில் கட்டிலை எடுத்து செல்வதாலும், ஒருவரை குணமாக்குவதாலும் ஓய்வு நாளின் சட்டம் மீறப்படுகிறது எனக் குற்றம் சாட்டினார்கள்.
"ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை" என்றார் இயேசு.
ஓய்வு நாளில் எந்த ஒரு வேலையும் செய்யக் கூடாது என திருச்சட்டத்தில் உள்ளது என அவர்கள் அவரிடம் கூறுகிறார்கள்.
அதற்கு இயேசு "உங்கள் ஆடோ, மாடோ குழியில் விழுந்தால் ஓய்வு நாளில் தூக்கி விட மாட்டீர்களா?" என கேட்டார்.
அவர்கள் அமைதியானார்கள். இயேசு அவர்களிடம் "ஓய்வு நாட்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா?" எனக் கேட்க அவர்கள் கலைந்து செல்ல தொடங்கினார்கள்.
நாமும் அந்த யூதர்களை போல தான் வாழ்ந்து வருகிறோம். "நான் ஆறு நாட்கள் கடினமாக வேலைக்கு சென்றுள்ளேன். அதனால் ஒரு நாளாவது நான் வீட்டிலிருந்து ஓய்வு எடுக்க போகிறேன்" எனக் கூறி ஞாயிற்றுக்கிழமைகளிலும் வீட்டிலிருந்து பொழுதை போக்குகிறோம்.
நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கை கடவுள் தந்தது. இவ்வளவு பெரிய வாழ்வையும் அதிலிலுள்ள மனிதர்களையும் தந்தவர் அவர். இத்தனையும் தந்தவருக்கு நாம் வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் அந்த கடன் தீராது. அவருக்காக ஞாயிற்றுக்கிழமையை கூட செலவிட நாம் யோசிக்கின்றோம்.
அக்காலத்தில் பலர் இயேசுவை பின் தொடர்ந்து சென்று அவர் செயல்களில் குற்றம் காண்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். தாங்கள் கடவுளின் திருவுளப்படி நடப்பவர்கள் எனப்பெருமை அடித்துக்கொள்ளவே அது போன்ற செயல்களை செய்தார்கள். நாம் எப்படி இருக்கிறோம்?
மனிதநேயப் பணிகளையும், இறைபணிகளையும் ஓய்வு நாளில் செய்யலாம் என்பதே இயேசுவின் போதனை.
நாம் அதை தவறாக புரிந்து கொண்டு ஓய்வு நாள் என்றால் அந்த நாள் முழுவதும் ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஓய்வு நாள் என்பது கடவுள் நமக்கு தரும் ஒரு கொடை. அதனை நாம் நல்ல முறையில் பயன்படுத்தவும் கடவுளை போற்றவுமே என புரிந்துக்கொண்டு வாழ வேண்டும்.