< Back
ஆன்மிகம்
How to find Mangalya Dosham
ஆன்மிகம்

ஜாதக அமைப்பு இப்படி இருந்தால் மாங்கல்ய தோஷம் உண்டாகும்

தினத்தந்தி
|
12 Jun 2024 1:53 PM IST

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் கெட்டுவிடும் போது கணவனின் ஆயுளை குறைத்து விடும்.

தீர்க்க சுமங்கலி பவ என்று சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம். அதாவது கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பது ஆகும். மாங்கல்யம் என்றால் தாலியை குறிப்பது ஆகும். ஒரு பெண் திருமணம் செய்த பின் தங்கள் துணையுடன் நீண்ட ஆயுளுடனும் மகிழ்வுடனும் வாழ்வதைக் குறிக்கும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய பலம் நன்கு இருக்கும் போது அவளுடைய கணவனுக்கு தீர்க்காயுளைத் தரும். அந்த மாங்கல்ய ஸ்தானம் கெட்டுவிடும்போது கணவனின் ஆயுளை குறைத்து விடும். இதனைத்தான் மாங்கல்ய தோஷம் என்கின்றனர்.

மாங்கல்ய தோஷம் எப்படி ஏற்படுகிறது?

ஜாதக ரீதியாக பார்த்தோமேயானால் எட்டாம் பாவம்தான் கணவன் அல்லது மனைவியின் ஆயுள் பலத்தைக் குறிப்பிடுகிறது. அந்த இடத்திற்குப் பெயர்தான் அஷ்டமஸ்தானம் என்கின்றனர். பொதுவாக அஷ்டமஸ்தானத்தில் தீய கிரகங்கள் நிற்க கூடாது. சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இந்த ஐந்தும் நின்றால் மாங்கல்ய தோஷம் என்கின்றனர். மேலும், அஷ்டமஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் இணைந்து இருந்தாலும் மற்றும் சுக்கிரன் ராகு இணைந்து இருந்தாலும் அல்லது களத்திர ஸ்தானத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஜாதகத்தில் நீச சுக்கிரன், அல்லது அந்த இடத்தில் கிரகங்கள் வலிமை இழந்து இருப்பதும் மாங்கல்ய தோஷத்தை உண்டாக்கும் என்கின்றனர். இதோ அதற்கான விடை..

மாங்கல்ய தோஷத்திற்கான விதிகள்

மாங்கல்ய ஸ்தானமான அஷ்டமஸ்தானத்தில் சனியும் சூரியனும் ஒன்று சேர்ந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

ஆயுள் ஸ்தானத்தில் நீச சுக்கிரன் மற்றும் சூரியன் இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

மாங்கல்ய ஸ்தானமான அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும் சூரியனும் ஒன்று சேர்ந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

மாங்கல்ய ஸ்தானமான அஷ்டம ஸ்தானத்தில் நீச சனியும் சூரியனும் ஒன்று சேர்ந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

கீழ்க்கண்ட உதாரண ஜாதக கட்டங்களில் எங்கே என்ன கிரகம் இருந்தால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் என பார்க்கலாம்.

உதாரணமாக, ஜாதகம் ஒன்றில் இருப்பதுபோன்று அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

ஜாதகம் இரண்டில் இருப்பதுபோன்று எட்டாம் இடத்தில் செவ்வாயும் சூரியனும் இருந்தால் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

ஜாதகம் மூன்றில் இருப்பதுபோன்று அஷ்டம ஸ்தானத்தில் சனி இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

ஜாதகம் நான்கில் இருப்பதுபோன்று ஆயுள் ஸ்தானத்தில் நீச சந்திரன் இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

ஜாதகம் ஐந்தில் இருப்பதுபோன்று மாங்கல்ய ஸ்தானத்தில் பலவீனமான சூரியன் இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

ஜாதகம் ஆறில் இருப்பதுபோன்று மாங்கல்ய ஸ்தானத்தில் சூரியன் நின்று அதனை பாப கிரகங்களான செவ்வாய் பார்த்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

ஜாதகம் ஏழில் இருப்பதுபோன்று அஷ்டம ஸ்தானமான மாங்கல்ய ஸ்தானத்தில் சனி நின்று அங்கு செவ்வாயும் சூரியனும் பார்த்துக் கொண்டிருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

ஜாதகம் எட்டில் இருப்பதுபோன்று மாங்கல்ய ஸ்தானத்தில் நீச செவ்வாய் இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகும்.

மாங்கல்ய ஸ்தானத்தைக் கொண்டு மட்டும் கணவனின் ஆயுளை கணக்கிட முடியாது. அதன் அதிபதி எங்கே இருக்கின்றார் என்பதையும் பார்க்க வேண்டும். அந்த இடத்தில் சுப கிரகங்களின் பார்வை பட்டிருக்கின்றதா என்பதையும் பார்க்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் சுப கிரகம் இருக்கிறதா அல்லது அசுப கிரகம் இருக்கின்றதா என்பதையும் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுதான் அவர்களுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும். மேலோட்டமாக பார்த்து விட்டு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

கட்டுரையாளர்: ஜோதிடர் ந.ஞானரதம், செல்- 9381090389.

மேலும் செய்திகள்