< Back
ஆன்மிகம்
உதவி உயர்வு தரும்...!
ஆன்மிகம்

உதவி உயர்வு தரும்...!

தினத்தந்தி
|
2 Jun 2023 9:28 PM IST

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வது தான் உண்மையான உதவி. பிறருக்கு நாம் செய்த உதவிக்கு நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் தான் கூலியை எதிர்பார்க்க வேண்டும்.

உலகில் வாழும் எந்தவொரு உயிரினமும் பிறரின் உதவியின்றி தனித்து வாழ்ந்துவிட முடியாது. எனவே, பிறருக்கு உதவி செய்யும் இனிய பண்பை எப்போதும் நாம் கட்டாயம் கடைபிடித்து வரவேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வது தான் உண்மையான உதவி. பிறருக்கு நாம் செய்த உதவிக்கு நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் தான் கூலியை எதிர்பார்க்க வேண்டும். இதனால் தான் குர்ஆனின் தொடக்க வசனமே நாம் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை சொல்லித்தருகிறது இப்படி:

'அல்லாஹ்வே! நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்'. (திருக்குர்ஆன் 1:5)

மற்றொரு வான்மறை வசனம் நம்மை எச்சரிக்கிறது இப்படி:

'வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதென்பதையும் நீங்கள் அறியவில்லையா? நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனும் இல்லை; உதவி செய்பவனுமில்லை'. (திருக்குர்ஆன் 2:107)

நாம் செய்யும் அந்த உதவி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் குர்ஆன் கூறிக்காட்டுகிறது இப்படி:

'நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்'. (திருக்குர்ஆன் 5:2)

இன்றைக்கு நம்முடைய உதவிக்கரங்கள் எப்படி இருக்கின்றன என்று நமக்கு நாமே சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய நேரமிது. நம்மைச் சுற்றி தேவை உள்ளவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கான அவசியத்தேவை என்ன என்பதை உணர்ந்து உதவி செய்ய வேண்டும்.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்'.(திருக்குர்ஆன் 47:7)

அல்லாஹ்வுக்கு உதவி செய்வது என்பது அல்லாஹ்வுடைய வழியில், நேர்மையான வழியில், நியாயமான வழியில், மெய்யான வழியில் உதவி செய்வது என்று பொருள், அப்படி உதவி செய்யும் போது தான் அல்லாஹ் நமது பாதங்களை பலப்படுத்துகிறான். நாம் மனதாலும், உடலாலும் ஆரோக்கியமாக இருப்பதும் கூட அல்லாஹ் நமக்குச் செய்யும் பேருதவியாகும். நபிகள் நாயகம் கூறியதாக திர்மிதி நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

'எவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறாரோ, அவருக்கு எழுபத்து மூன்று வகையான மன்னிப்புகள் வழங்கப்படுகின்றன'.

'எவர் கஷ்டப்படுபவர்களுக்கு கருணை காட்டுகிறாரோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு நாளை மறுமையில் நிழலில்லாத அந்த நாளில் அல்லாஹ் தன் நிழலின் கீழ் நிழலைத் தருகின்றான்'.

'எவர் ஒருவரின் சிறு தேவையை பூர்த்தி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நாளை மறுமையில், கால்கள் நடுங்கும் நாளில், அவரது காலை நடுங்காமல் இருக்கும்படி செய்கின்றான்'.

'எவர் தன் சகோதரருக்கு உதவி செய்து மென்மையுடன் நடந்து கொள்கிறாரோ அவருக்கு சுவனத்திலுள்ள தனது பணியாளர்களின் மூலம் பணிவிடை செய்வதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கிக் கொள்கிறான்'.

தீமைக்கும் தவறான வழிகளுக்கும் உதவி செய்தால் அதற்கான தண்டனை என்ன என்பதையும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் இப்படி:

'எவர் வழிகேட்டின் கொடியை தூக்கிப்பிடிக்கிறாரோ அல்லது கல்வி ஞானத்தை மறைக்கிறாரோ அல்லது அவன் அநியாயக்காரன் என்று தெரிந்து கொண்டே அந்த அநியாயக்காரனுக்கு உதவி செய்கிறாரோ அவர் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் விலகியவராவார்'. (நூல்: திர்மிதி)

எனவே நாம் செய்யும் உதவிகளில் எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கூட நமக்குப் பிரியமானதையே மற்றவர்களுக்கும் பிரியப்பட வேண்டும். அது தான் நன்மைக்குரிய காரியம். ஏனெனில் உதவி என்ற பெயரில் நமக்குத் தேவையில்லாதவைகளை, கெட்டுப்போனவைகளை அள்ளிக்கொடுப்பதில் என்ன நன்மைகளை நாம் எதிர்பார்க்க முடியும்.

இது குறித்தும் குர்ஆன் கூறுகிறது: 'உங்களுக்கு நீங்கள் எதை விரும்புவீர்களோ அவைகளிலிருந்து வழங்காத வரை நிச்சயம் நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்'. (திருக்குர்ஆன் 3:92)

எனவே நமது உதவிகள் அர்த்தமுள்ளதாக, உயர்தரமானதாக, பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் சரியாக முறையாகச்செய்யும் போது தான் இறை உதவியை தொய்வின்றி தொடர்ந்து பெறமுடியும். நம்மைப் படைத்த அல்லாஹ் அனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறான் என்பதையும் அதற்கு ஏற்ப நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதையும் இவ்வாறு குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது:

'ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு; உம் இறைவன் அவர்கள் செய்ததைப் பற்றி மறந்தவனாக இல்லை'. (திருக்குர்ஆன் 6:132)

எனவே நாம் அடுத்தவர்களுக்கு மனதார, தாராளமாக உதவி செய்வோம். உதவி செய்வதென்பது செலவல்ல. அது தான் நமக்கான ஈருல மூலதனம் என்பதை என்றும் மறவாது உணர்ந்து உயர்ந்திடுவோம்.

மேலும் செய்திகள்