வருகிற 1-ந் தேதி முதல் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
|குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருச்சூர்,
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 80-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து உள்ளன. இதனால் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில், கோவிலில் தரிசன நேரத்தை அதிகரிக்கவும், வி.ஐ.பி. மற்றும் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்வது குறித்து குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஆட்சி குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குருவாயூர் தேவசம்போர்டு தலைவர் வி.கே.விஜயன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் வி.ஐ.பி. மற்றும் சிறப்பு தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் வருகிற 1-ந் தேதி முதல் உதயா ஸ்தமன பூஜை நடைபெறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகள், பொது விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
குழந்தைகளுக்கு சோறு ஊட்டுதல், நெய் விளக்கு வழிபாடுகளில் கலந்துகொள்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. அவர்களுக்கு வழக்கம் போல சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படும். பொது விடுமுறை நாட்களில் காலையில் வழக்கம்போல் நடை திறந்து மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 3.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். இதன் மூலம் பக்தர்கள் கூடுதலாக ½ மணி நேரம் தரிசனம் செய்ய முடியும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது