< Back
ஆன்மிகம்
பிரம்மோற்சவ விழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நான்கு மாடவீதிகளில் கோலாகலமாக நடைபெற்ற தங்கத்தேரோட்டம்
ஆன்மிகம்

பிரம்மோற்சவ விழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நான்கு மாடவீதிகளில் கோலாகலமாக நடைபெற்ற தங்கத்தேரோட்டம்

தினத்தந்தி
|
3 Oct 2022 7:12 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. அதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் பங்கேற்றார்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது.

அனுமந்த வாகன வீதிஉலா

உற்சவர் மலையப்பசாமி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக 'ராமச்சந்திரமூர்த்தி' அலங்காரத்தில் சுதர்சன சாளக்ராம ஹாரம் மற்றும் தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து தமக்கு பிடித்தமான, விசுவாசமான அனுமந்த வாகனத்தின் மீது அமர்ந்தபடி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அனுமனை போல் பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்துடன் பக்தர்களும், பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே மலையப்பசாமி அனு மந்த வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

தோளில் சுமந்த தலைமை நீதிபதி

அனுமந்த வாகனச் சேவையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் பங்கேற்று தொடங்கி வைத்து, வாகனத்தை தனது தோளில் சுமந்து வந்து தரிசனம் செய்தார். வீதிஉலாவுக்கு முன்னால் லலித்தின் மனைவி நான்கு மாடவீதிகளில் நடன குழுவினருடன் நடனம் ஆடினார்.

முன்னதாக நேற்று அதிகாலை 5 மணியளவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த தலைமை நீதிபதிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் உயரிய வரவேற்பான "இஸ்தி கப்பல்" வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி யு.யு.லலித்தும், மனைவியும் திருச்சானூருக்கு சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தனர்.

அனுமந்த வாகனச் சேவையில் ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.ராஜா (பொறுப்பு), அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தங்கத்தேரோட்டம்

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து காலை 6 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் மனைவி சொர்ணலதாரெட்டி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மேலும் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. வாகனச் சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சூரிப பிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

மேலும் செய்திகள்