தேவன் தரும் பாதுகாப்பு
|அன்பானவர்களே, உலக வாழ்க்கையில் அனுதினமும் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து வழி நடத்துகிறார். இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் நமக்கு எதிராக ஒரு சிலர் பலவிதமான தந்திரமான செயல்களில் ஈடுபடுகின்றார்கள்.
வேதத்திலிருந்து ஒரு சம்பவத்தை இங்கே பார்ப்போம்:
இஸ்ரவேல் மக்கள் எகிப்து என்னும் அடிமைத்தனத்தில் இருந்து கர்த்தரால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்திற்கு நடந்து செல்கிறார்கள். கர்த்தர் அவர்களுக்கு முன்பாக போய், அவர்களுக்காக வழியை ஆயத்தம் செய்து, வெற்றியை கொடுக்கிறார். அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள ராஜாக்கள், தேசங்கள் அனைத்தையும் கர்த்தரால் வெற்றி பெறுகிறார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் இப்போது மோவாப் என்னும் தேசத்திற்கு அருகே பயணம் செய்கின்றார்கள். இந்த தேசத்தின் ராஜாவாக பாலாக் என்பவர் இருக்கிறார். இவர் இஸ்ரவேல் ஜனங்களின் தொடர் வெற்றியைக்குறித்து கலக்கம் அடைந்து, பயப்படுகிறார். அவர்களை நேருக்கு நேராக யுத்தம் செய்து எதிர்ப்பதற்கு பதிலாக, கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவர் மூலமாக இந்த மக்களை சபிக்கச் செய்ய வேண்டும் என்று ஒரு தந்திரமான குறுக்கு வழியை நாடுகிறார். இதற்காக பிலேயாம் என்ற ஒரு தீர்க்கதரிசியை அழைத்து வரும்படி தன்னுடைய அதிகாரிகளை அனுப்புகிறார்.
அவர்கள் பிலேயாமிடம் சென்று ராஜா கூறியதாக இவ்வாறு கூறினார்கள்: "எகிப்தில் இருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது. அவர்கள் எனக்கு எதிரே இறங்கி இருக்கிறார்கள். அவர்கள் என்னிலும் பலவான்கள். ஆனாலும், நீர் ஆசீர்வதிக்கிறவன், ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன், சபிக்கப்பட்டவன் என்று அறிவேன். ஆதலால் நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களை சபிக்க வேண்டும். அப்பொழுது நான் அவர்களை முறியடித்து இந்த தேசத்தில் இருந்து துரத்தி விடலாம்".
ராஜாவின் இந்த வார்த்தைகளை கேட்ட பிலேயாம் இதைச்சொன்ன அதிகாரிகளிடம், 'ராத்திரி இங்கே தங்கி இருங்கள். கர்த்தர் எனக்கு சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன்' என்றான். இதையடுத்து மோபாவின் பிரபுக்கள் பிலேயாம் இடத்தில் தங்கினார்கள். அன்று இரவில், தேவன் பிலேயாமிடத்திலேயே வந்து, 'உன்னிடத்தில் இருக்கிற இந்த மனிதர்கள் யார்?' என்றார். அதற்கு பிலேயாம் தேவனை நோக்கி, 'பாலாக் என்னும் மோபாபிய ராஜா அவர்களை என்னிடத்தில் அனுப்பி, எகிப்தில் இருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது, அவர்களை நீ வந்து எனக்காக சபிக்க வேண்டும் என்று என்னிடம் சொல்ல சொன்னான்' என்றார். அதற்கு தேவன் பிலேயாமை நோக்கி, "நீ அவர்களுடன் போக வேண்டாம். அந்த ஜனங்களை சபிக்கவும் வேண்டாம். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என்றார். பிலேயாம் இதை பாலாக்கின் பிரபுக்களிடம் கூறி, 'நீங்கள் உங்கள் தேசத்துக்கு போய் விடுங்கள். நான் உங்களோடு வருவதற்கு கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கவில்லை' என்றார்.
இதை அப்படியே அதிகாரிகள் ராஜாவிடம் தெரிவித்தனர். ஆனால், மேலும் சில உயர் அதிகாரிகளை மீண்டும் பிலேயாமினிடத்துக்கு ராஜா அனுப்பினார். இதை தவிர்க்க முடியாமல் பிலேயாம், பாலாக் ராஜா இருக்கும் இடத்திற்கு வருகிறார். ஒரு மலை உச்சியில் இருந்து, கீழே இருக்கும் இஸ்ரவேல் மக்களை சபிக்கும்படி பாலாக் ராஜா தீர்க்கதரிசி பிலேயாமினிடத்தில் கூறுகிறார். பிலேயாம் கர்த்தருடைய வார்த்தைக்காக பிரார்த்தனை செய்கிறார். அப்போது கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்காக வைராக்கியத்துடன் இவ்வாறு பேசுகிறார்:
``இதோ ஆசீர்வதிக்க கட்டளை பெற்றேன். அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது. அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார். ராஜாவின் ஜெய கம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. தேவன் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்பட பண்ணினார். காண்டாமிருகத்துக்கு ஒத்த பலன் அவர்களுக்கு உண்டு. "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை" என்றார்.
அன்பானவர்களே, இன்றைக்கு நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் நமக்கு எதிராக நம்மோடு கூட இருப்பவர்களையே பயன்படுத்துவார்கள். அவர்களும் நமக்கு எதிராக பேசுவார்கள், யுத்தம் செய்வார்கள், மந்திர, தந்திரம் செய்வார்கள்.
ஆனாலும் கர்த்தர் சொல்கிறார். "நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமானதாய் இரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார்".
ஆம், அவரே நம் கேடகமும், நம் மகிமையும், நம் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறார். எந்த தீங்கும் உங்களை சேதப்படுத்தாது, பெலன் கொண்டு, திடன் கொள்ளுங்கள். ஆமேன்.