பயத்தை விலக்கும் பிரத்தியங்கிரா தேவி
|சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்திருந்தபோது, அந்த பறவையின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்டவர், பிரத்தியங்கிரா தேவி.
சக்தியின் உக்கிர வடிவங்களில், இந்த தோற்றமும் ஒன்று. சிங்க முகம், பெண் உடல் கொண்டு காட்சி தரும் பிரத்தியங்கிரா தேவியை சில ஆலயங்களில் நாம் தரிசிக்க முடியும். இந்த அன்னையை 'காலகண்டி', 'பைரவ மகிஷி' என்றும் அழைப்பார்கள்.
தனது பக்தனான பிரகலாதனை கொடுமைப்படுத்திய இரண்யகசிபுவை அழிப்பதற்காக, மகாவிஷ்ணு புதிய அவதாரம் எடுக்க வேண்டியதிருந்தது. இரண்யகசிபு பெற்றிருந்த வரத்தின்படி அவனை, மனிதர்களோ, மிருகங்களோ, உலோகங்களால் செய்யப்பட்ட ஆயுதங்களாலோ அழிக்க இயலாது. மேலும் அவனது ரத்தம் கீழே சிந்தினால் அதில் இருந்து மீண்டும் மீண்டும் அவன் வெளிப்படுவான். அதன்காரணமாகவே மகாவிஷ்ணு, மனிதனும் அல்லாத, மிருகமும் அல்லாத, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்மர் வடிவத்தை எடுத்தார். மேலும் இரண்ய கசிபுவை தன்னுடைய கூரிய நகங்களால் கொன்றார். அவன் ரத்தம் கீழே சிந்தாமல் இருக்க அதை குடித்தார்.
அரக்கனின் ரத்தம் அவரது உடலுக்குள் புகுந்ததால், அவரது உக்கிரம் மேலும் அதிகரித்தது. அவர் கண்ணில் காணும் பொருட்களை எல்லாம் சேதப்படுத்தத் தொடங்கினார். இதனால் உலகிற்கு ஆபத்து நேரலாம் என்று பயந்த தேவர்கள், சிவபெருமானை வேண்டினர். உடனே சிவபெருமான் 'சரபம்' என்னும் வடிவம் எடுத்தார். அது பறவை, பூதம், மிருகம் ஆகியவை சேர்ந்த கலவையான பயங்கர உருவமாக இருந்தது. ஈசனின் இந்த வடிவத்தை 'சரபேஸ்வரர்' என்று வழிபடுகிறோம்.
சரப வடிவம் எடுத்த ஈசன், நரசிம்மரை தடுத்து நிறுத்தினார். இதனால் கோபம் கொண்ட நரசிம்மர், 'கண்ட பேருண்டம்' என்னும் பறவையின் சக்தியை வெளிப்படுத்தினார். அந்த சக்தி, சரப பறவைக்கு எதிரியாகும். எனவே சரபேஸ்வரர், தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து பிரத்தியங்கிரா தேவியை தோற்றுவித்தார். அந்த தேவி ஆயிரம் சிங்க முகம், இரண்டாயிரம் கண்கள், இரண்டாயிரம் கைகள், புலியின் நகங்கள், எமனைப் போன்ற கரிய நிறம், யானையை விட பத்து மடங்கு பெரிய உருவம் என்று விஸ்வரூபமாக காட்சி தந்தார். பின்னர் அந்த தேவி, நரசிம்மர் வெளிப்படுத்திய கண்ட பேருண்டம் பறவையின் சக்தியை தன் வாய்க்குள் போட்டு விழுங்கினார். இதனால் நரசிம்மர் சாந்தமாக மாறினார்.
பிரத்தியங்கிரா தேவியின் அந்த பிரம்மாண்ட வடிவத்தை, பக்தா்கள் வழிபட இயலாது என்பதால், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிங்க முகம், மனித உடல், எட்டு கரங்களுடன் கூடிய வடிவத்திற்கு அன்னை மாறினார். ஆலயங்களில் இந்த பிரத்தியங்கிரா தேவியின் உருவத்தைப் பார்க்கும் போது உக்கிரமாக தோன்றினாலும், அவரது வாய்ப் பகுதியைப் பார்க்கும் போது, ஒரு சிறிய புன்னகை இழையோடுவதைக் காண முடியும். இந்த அன்னை நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரை வாகனமாக கொண்டவர். இந்த அன்னையை வழிபாடு செய்தால், எந்த விதத்தில் நமக்கும் பயம் ஏற்பட்டாலும், அந்த பய உணர்வு அகன்று விடும் என்பது நம்பிக்கை.
இந்த தேவிக்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆலயங்களும், சன்னிதிகளும் அமைந்திருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது, கும்பகோணம் அருகில் அய்யவாடி என்ற இடத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோவில். தூத்துக்குடியிலும் பிரத்தியங்கிரா தேவிக்கு தனிக் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள தேவியின் உருவமானது ஒரே கல்லில் வடிக்கப்பட்டது என்பது சிறப்புக்குரியது. சென்னை சோளிங்கநல்லூர், சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகில் வெண்பாக்கம் கிராம மலையடிவாரம், சீர்காழி அடுத்த திருவெண்காடு, சீர்காழி அருகே உள்ள வரிசைபத்து, வேலூர் மாவட்டம் பள்ளூர், கன்னியாகுமரி மாவட்டம் ஊழிக்கோடு, தேனி மாவட்டம் சீலையம்பட்டி ஆகிய இடங்களில் பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் அமைந்துள்ளது. ஓசூரில் உள்ள பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் ராஜ கோபுரத்தில், அந்த தேவியின் பிரம்மாண்ட உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
மிளகாய் யாகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு, ஒவ்வொரு அமாவாசை அன்றும் மிளகாய் யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாகத்தை 'பிரத்தியங்கிரா யாகம்' என்றும், 'நிகும்பலா யாகம்' என்றும் அழைக்கிறார்கள். அய்யவாடி, நடுக்கரை ஆகிய இடங்களில் உள்ள பிரத்தியங்கிரா தேவி ஆலயங்களிலும் இந்த யாகம் செய்யப்படுகிறது. சீர்காழி அடுத்த வரிசைபத்து கிராமத்தில் உள்ள பிரத்தியங்கிரா ஆலயத்தில், ஒரு மாதத்தில் அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய மூன்று தினங்களில் இந்த யாகம் நடத்தப்படுகிறது.