பத்மாவதி தாயார் அவதரித்த கதை
|திருப்பதி அருகில் உள்ள ஊர் திருச்சானூர். தாயார் அலர்மேல்மங்கை என்றும் பத்மாவதி தாயார் என்றும் வணங்கப்படுகிறார்.
திருவேங்கடன் தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.
ஏழுமலையானின் ஆணை:
பத்மாவதி தாயாரை தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு ஏழுமலையான் ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செல்வம் பெற்ற பக்தர்கள் அதில் ஒரு பகுதியை ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். பத்மாவதி அன்னையை குளிர்விக்க ஆண்டுதோறும், சித்திரை மாதம் வசந்த உற்சவம் நடைபெறும்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கு முன்பு திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிய பின்பு தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக பக்தர்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
திருமகள் அவதாரம்:
வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். தன் மார்பை எட்டி உதைத்த பிருகு முனிவரை மன்னித்த திருமால் மீது கோபம் கொண்ட திருமகள் அவரை விட்டு நீங்கி பூவுலகம் வர, அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர நாராயணனும் புறப்பட்டு வந்தார் என்பது புராணம்.
பூலோகம் வந்த மகாலட்சுமி சந்திரவம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் எனும் மன்னன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பெண் மகவாகத் தோன்றி, பத்மாவதி எனும் பெயருடன் வளர்ந்தாள். பருவம் வந்த உடன் பெண் கேட்டு வந்தார் சீனிவாசன். பொருள் இல்லாததால் திருமணச் செலவிற்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாசன்.
கணகாம்பரமும், கருவேப்பிலையும் சேர்ப்பதில்லை:
திருமணம் சிறப்பாக நடந்தேறியது. மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. ஸ்ரீநிவாசன் பத்மாவதி தாயார் திருமண விருந்தில் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படவில்லை என்பதால், தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்ததாக சொல்வார்கள் எனவேதான் இன்றும் திருப்பதியில் கனகாம்பரமும், கருவேப்பிலையும் எந்த விதத்திலும் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லையாம்.
பத்மாவதி தாயாரின் அருள் கிடைக்க:
பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூரை, சுகபுரி என்றும் அழைக்கப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். 'வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் காலையில் எழுந்த உடன் இந்த மந்திரத்தை கூறினால் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.