< Back
ஆன்மிகம்
இயற்கையின் இயல்பை மாற்றிய தேவன்
ஆன்மிகம்

இயற்கையின் இயல்பை மாற்றிய தேவன்

தினத்தந்தி
|
11 Oct 2022 7:08 AM IST

இந்த உலகத்தையும், அதில் உள்ள ஒவ்வொன்றையும் தேவன் தன் விருப்பப்படி படைத்தார். அவற்றை நாம் பார்க்கையில் அவை ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அதிசயமும் தருபவையாக அமைந்துள்ளன. பல படைப்புகள் நமக்கு பிரமிப்பை தருபவையாகவும் உள்ளன.

இவ்வாறு உலகத்தை ஆச்சரியமும் அதிசயமும் நிறைந்ததாக படைத்த தேவன், தான் படைத்த படைப்புகளை அதிகமாய் நேசித்தார். அதனால்தான் தன்னுடைய ஒரே குமரனாகிய இயேசு கிறிஸ்துவையும் இந்த உலகிற்கு அனுப்பி பாடுகள் பல படவும், சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கவும், பின்பும் உயிர்த்தெழவும் அனுமதித்தார்.

இவ்வாறு தன்னுடைய படைப்புகளுக்காக மகனையே தந்த தேவன், பழைய ஏற்பாட்டு காலத்திலும் தன் மக்களுக்காக இயற்கைக்கு மாறான அற்புதங்கள் பலவற்றை செய்து அவர்களுக்கு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் மழையின்றி, கடுமையான வறட்சி நிலவிய காலத்தில், காகங்களைக் கொண்டு, எலியாவிற்கு காலையிலும், மாலையிலும் அப்பமும் இறைச்சியும் கிடைக்கும் படி தேவன் கிருபை செய்தார். இயற்கையாகவே தனக்கு கிடைக்கும் எந்த உணவை உண்டு பழக்கப்பட்ட காகங்கள், இறைவனின் கட்டளைப்படி இறை தூதராகிய எலியாவிற்கு உணவை கொண்டு வந்து கொடுத்தன.

நீரில் வாழும் சிறிய மீன்களானாலும், பெரிய மீன்களானாலும் தனக்கு கிடைக்கும் எதையும் விழுங்கி, அதை உணவாக உட்கொள்ள கூடியவை. கர்த்தரின் உத்தரவின்படி நினிவேக்கு செல்லாமல், தர்சீசுக்கு கப்பலில் பயணித்த யோனாவை, தேவன் பெரிய மீனைக் கொண்டு விழுங்க செய்து, அதனுடைய வயிற்றில் அமர்ந்து பயணம் செய்யும் படி வைத்தார். கப்பலில் பயணித்த அவரை, மீனின் வயிற்றில் பயணிக்க வைத்து, நினிவே பட்டணத்தில் பத்திரமாக கரையும் சேர்த்தார். அப்படியே யோனாவின் மூலம் கர்த்தர் தான் நேசித்த நினிவே மக்கள் பாவ வாழ்க்கையில் இருந்து மனம் மாறி தன்னை தேடும்படி செய்தார்.

எசேக்கியா அரசர் நோயுற்று மரணப் படுக்கையில் இருந்தபோது, தேவன் அவரது கண்ணீரின் வேண்டுகோளினை ஏற்று, வாழும் காலத்தை பதினைந்து ஆண்டுகள் அதிகரித்துக் கொடுத்தார். அதற்கு அடையாளமாக அவர் கேட்டுக் கொண்டபடி நிழற்கடிகையில் பத்துப்பாகை முன்னோக்கிப் போயிருந்த நிழல், பத்துப்பாகை பின்னோக்கி வரச் செய்தார்.

அதுமட்டுமின்றி நீந்திக் கடக்க வேண்டிய செங்கடலை, இஸ்ரேல் மக்களும் மோசேயும் கால்கள் நனையாதபடி நடந்தே கடக்கும்படி செய்தார்.

"கதிரவனே! கிபயோனில் நில். நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்" என்ற யோசுவாவின் வேண்டுகோளின்படி, கர்த்தர் நகர்ந்து கொண்டிருந்த சூரியனையும் சந்திரனையும் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும்படி செய்தார்.

இவ்வாறு, தான் படைத்த படைப்புகளை, இயற்கையாக அவை கொண்டிருக்கும் இயல்பை மாற்றி, தான் நேசிக்கும் மக்களுக்கு உதவும்படி செய்தார். இன்றும் நாம் விசுவாசத்தோடு தேவனை நோக்கி மன்றாடும்போது நாம் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நபரிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்க செய்ய வல்லவராய் அவர் இருக்கிறார். நம்மை இவ்வளவு அதிகமாய் அன்பு கூரும் அவரை, நாமும் அன்பு செய்து அவரோடு இணைந்து வாழ்வோம்.

டோனி, சென்னை.

மேலும் செய்திகள்