வியப்பூட்டும் விநாயகர்
|சிதம்பரத்தில், திருமுறைப் பாடல்கள் இருக்கும் இடத்தை காட்டிய விநாயகரும், உச்சிப்பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.
* திருச்சி மலைக்கோட்டை மீது அமர்ந்த பிள்ளையாரை 'உச்சிப்பிள்ளையார்' என்று அழைப்பார்கள். கும்பகோணத்திலும் ஒரு உச்சிப்பிள்ளையார் அருள்கிறார். இங்கு மலை போன்ற அமைப்பை உருவாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இது தவிர சிதம்பரத்தில், திருமுறைப் பாடல்கள் இருக்கும் இடத்தை காட்டிய விநாயகரும், உச்சிப்பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.
* பூமி மட்டத்தில் இருந்து சில அடி ஆழத்தில் பல படிகள் இறங்கிப் போய் வழிபடும்படி அமைந்த விநாயகர் சன்னிதிகள் உண்டு. அப்படி அருளும் விநாயகரை, 'ஆழத்துப்பிள்ளையார்', 'பாதாள விநாயகர்' என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் விருத்தாச்சலம், ஆந்திராவில் காளகஸ்தி ஆகிய இடங்களில் இந்த விநாயகர்களை தரிசிக்கலாம்.
* மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்ற இடம் உள்ளது. இதன் அருகே உள்ள திலதர்ப்பணப்புரி என்ற இடத்தில் ஆதிவிநாயகர் வீற்றிருக்கிறார். இவருடைய சிறப்பு என்னவென்றால், இவர் மனித முகத்தோடு அருள்புரிகிறார்.
* திருப்பரங்குன்றத்தில் அருளும் கற்பக விநாயகர், வழக்கத்திற்கு மாறாக தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில் தன்னுடைய கையில் கரும்பை ஏந்தி காட்சியளிக்கிறார்.
* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 'ஓலமிட்ட விநாயகர்' அருள்புரிகிறார். நள்ளிரவில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை, ஊர் மக்கள் உணரும் பொருட்டு, ஓலமிட்டு காப்பாற்றியதால் இந்தப் பெயர் வந்தது. இதே ஊரில் லிங்கத்தின் ஆவுடைப் பகுதியில் லிங்கத்திற்குப் பதிலாக விநாயகர் அருளும், 'ஆவுடைப் பிள்ளையார்' அருள்பாலிக்கிறார்.
* தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்குடியில் அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கே அருள்பாலிக்கும் விநாயகரின் திருமேனி முழுவதும் விருச்சிகத்தின் (தேள்) செதில் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதனால் இவரை 'விருச்சிக விநாயகர்' என்கிறார்கள்.