ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்
|‘ஜெபம்’ என்பது, நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் நம்மை படைத்த இறைவனுடன் உறவாடவும், அவருடன் பேசவும் ‘ஜெபம்’ நமக்கு உறுதுணையாக இருக்கிறது.
நம்முடைய ஒவ்வொரு தேவையின் போதும், வேதனை மற்றும் சோதனையின் போதும் நம்முடைய குரல் இறைவனை எட்ட வேண்டும் என்றால், அதற்கு அவரை நோக்கி ஜெபிப்பது ஒன்றுதான் வழி. ஏனெனில் இறைவன் என்றுமே, தன்னை நாடுபவா்களின் குரலைக் கடந்து செல்பவர் அல்ல. நம்முடைய குரலைக்கேட்டு, நின்று நமக்கு பதில் தரக்கூடியவர் அவர் ஒருவரே.
"அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்" என்று திருப்பாடல் 90:15-ல் நமக்கு அவர் உறுதியளித்திருக்கிறார். தேவன் என்றுமே நம்முடைய வேண்டுதல்களையோ, ஜெபத்தையே புறக்கணிப்பவர் அல்ல. நிச்சயமாய் முடிவினை தருபவர். எனவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எந்த ஒரு காரணத்திற்காகவும் நம்முடைய ஜெபத்தினை நிறுத்தாமல், தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் இறைவனின் ஆசிர்வாதத்தை நாம் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.
எரிகோவிற்கு செல்லும் வழியோரமாய் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பார்வை இழந்த ஒருவர், மக்கள் கூட்டம் தன்னைக் கடந்து போவதை உணர்ந்தார். உடனே அதற்கான காரணத்தை அங்கிருந்தவர்களிடம் அவர் கேட்ட போது, 'நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார்' என்று தெரிவித்தார்கள்.
அதை கேட்டவுடன் அவர் ''இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று கூக்குரலிட்டார். உடனே அருகிலிருந்த மக்கள் அவரை அமைதியாய் இருக்குமாறு அதட்டினார்கள். ஆனால் அவர், ''தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
அவருடைய குரலை கேட்ட இயேசு உடனே நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், ''நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்'' என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், ''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என்றார். இயேசு அவரிடம், ''பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று'' என்றார். அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.
சூழ்ந்திருந்த மக்கள் தன்னை அமைதியாய் இருக்கும்படி அறிவுறுத்தியபோதும், இயேசுவால் மட்டுமே தனக்கு விடுதலை தர முடியும் என்று முழுமையாய் விசுவாசித்தார் அந்த பார்வை இழந்தவர். அந்த உறுதியான விசுவாசத்தின் காரணமாகதான், அவர் முன்பை விட இன்னும் அதிக சத்தத்துடன் இயேசுவை நோக்கி குரல் கொடுத்தார்.
'துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள். உங்களை காத்திடுவேன். அப்போது நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்' என்ற திருப்பாடல் 50:15 வார்த்தையின்படி, இயேசு தன்னை நோக்கி அழைத்த அந்த பார்வையற்றவரின் குரலைக் கேட்டு அதற்கான பதிலையும் கொடுத்தார். அதனால் பார்வை பெற்றவர் மட்டுமல்ல, அவரை அமைதியாய் இருக்கும்படி அதட்டிய மக்களும் அவருடன் சேர்ந்து கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.
பழைய ஏற்பாட்டில் யோசுவா தன்னுடைய வேண்டுதலால், சூரியனை கிபியோன் மீதும், சந்திரனை அய்யலோன் பள்ளத்தாக்கிலும் நிற்கும்படி கூறினார். அவருடைய குரலைக் கேட்டு சூரியன் அஸ்தமிக்க நினைக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றதாக விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளது.
அன்று யோசுவாவின் குரல் படைப்பைத்தான் நிறுத்தியது. ஆனால் இங்கு பார்வையற்றவரின் குரலோ அனைத்தையும் படைத்தவரையே நிற்க வைத்தது. அவர் கூக்குரலிட்டபோது இயேசு அதனை கடந்து செல்லாமல், அவருடைய குரலை கேட்டு நின்று அவருக்கு விடுதலையை கொடுத்தார். அதே இயேசு கிறிஸ்து இன்றும் நம் மத்தியில் உலாவி கொண்டுதான் இருக்கிறார். இப்போதும் அவர், 'அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்' என்ற வாக்குத் தத்தத்தின் படி நம்முடைய குரலை கடந்து செல்பவராய் அல்ல, அதற்கு பதில் அளிப்பவராகவே இருக்கிறார். அந்த உறுதியுடனும், நம்பிக்கையுடனும் நாமும் ஜெபிப்போம், இறை ஆசிர்வாதத்தை பெற்றவர்களாய் அவரை மகிமைப்படுத்துவோம்.