கருவை காத்தருளும் கர்ப்பரட்சாம்பிகை
|தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் என்ற திருத்தலத்தில் உள்ளது, முல்லைவன நாதர் உடனாகிய கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில். பிரசித்தி பெற்ற சிவன் தலமான இது பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். குழந்தை வரம் மற்றும் கருவைகாக்கும் அம்மனாக இத்தல கர்ப்பரட்சாம்பிகை விளங்குகிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 81-வது தேவாரத்தலம் ஆகும்.
முன்பொரு காலத்தில் சோழ நாட்டில் உள்ள வெட்டாற்றின் தென் கரையில் நிருத்துவர் என்ற முனிவர், தனது மனைவி வேதிகையுடன் வசித்து வந்தார். கருவுற்றிருந்த மனைவியை ஆசிரமத்திலேயே விட்டு விட்டு, நிருத்துவ முனிவர் வெளியே சென்றிருந்தார். அந்தநேரம் பார்த்து ஊர்த்துவ பாதர் எனும் முனிவர், ஆசிரமத்திற்கு வந்து உணவு கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை உடல் சோர்வு காரணமாக எழுந்து வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. இதையறியாத ஊர்த்துவ பாதர், வீட்டில் இருந்த பெண் தன்னை அலட்சியப்படுத்தியதாக எண்ணி, சாபமிட்டு சென்று விட்டார். முனிவரின் சாபம் காரணமாக வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதிகை செய்வதறியாது திகைத்தார்.
பின்னர் தான் நித்தம் வணங்கும் அம்பிகையிடம் தனது நிலை குறித்து வேண்டி முறையிட்டாள். அன்னையும் காக்கும் கடவுளாக எழுந்தருளி, வேதிகையின் உடலில் இருந்த அகன்ற கருவை, ஒரு குடத்துக்குள் வைத்து ஆவாகனம் செய்து, முழுக் குழந்தையாக உருவாகும் நாள்வரை காத்தாள். பின்னர் அந்தக் குழந்தைக்கு 'நைதுருவன்' எனப் பெயரிட்டு பெற்றோரிடம் சேர்த்தாள் அம்பிகை. இறைவியின் அருளை கண்டு மகிழ்ந்த வேதிகை 'இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, உலகில் கருத்தரித்தவர்களையும், கருவையும் காப்பாற்றவேண்டும்' என்று வேண்டினாள் என்று தலவரலாறு சொல்கிறது.
இத்தல இறைவன் 'முல்லை வனநாதர்' என்றும், வடமொழியில் 'மாதவிவனேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவருடையது, புற்று மண்ணால் ஆன சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கம் மீது முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடுக்கள் இப்போதும் காணப்படுகின்றன. புற்றுமண்ணால் ஆனவர் என்பதால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அவரது சன்னிதிக்கு வலதுபுறம் உளிபடாத சுயம்புவாக கற்பக விநாயகர் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் கருக்காத்த நாயகி அம்மன் தனிக்கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை போலவே, இந்த ஆலயத்திலும் அம்மனே பிரதானமாக உள்ளார்.
அம்மன் நின்ற கோலத்தில் கருணையை கண்களில் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளதால் இந்தக் கோவில் சோமாஸ்கந்தர் தத்துவத்துடன் விளங்குகிறது.கோவிலின் தல விருட்சம் முல்லைக்கொடி.இந்தக் கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. கிழக்கு பார்த்தபடி ராஜகோபுரமும், தெற்கில் நுழைவு வாசலும் உள்ளன. ஆலயத்திற்குள் நுழைந்ததும் தென்புறமும், பின்புறமும் நந்தவனங்களும், வடக்கே வசந்த மண்டபமும் காணப்படுகின்றன. சுவாமி கோவிலுக்கு முன்புறம் கொடிமரம், பலிபீடம், நந்தி இருக்கின்றன.கோவிலுக்குஎதிரே அமைந்துள்ள திருக்குளம், 'ஷீரகுண்டம்' (பாற்குளம்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதற்கு தெய்வப் பசுவான காமதேனுவின் 'பால் கலந்த குளம்'என்பது பொருள் ஆகும்.
திருமணம் நடப்பதற்கும், திருமணமாகி கருத்தரிப்பதற்கும் பெண்கள் இந்தத் திருக்கோவிலுக்கு நேரில் வந்து, அம்பாள் சன்னிதியில் உள்ள வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனைசெய்து வழிபட்டுச் செல்கிறார்கள். பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் தம்பதி சமேதராகவும், தாய் தனது குழந்தையை ஏந்திக் கொண்டும் கோவிலுக்கு வருகிறார்கள். பின்னர் அம்பாளின் சன்னிதிக்கு வந்து தங்களின் சக்திக்கேற்ப, கற்கண்டு, வாழைப்பழம், சர்க்கரை போன்றவற்றை எடைக்கு எடை துலாபாரம் தருகிறார்கள். மேலும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்வதும், புடவை சாத்துவதும் திருக்கோவிலில் நாளும் காணக்கூடிய அற்புதமான காட்சிகளாகும்.