< Back
ஆன்மிகம்
வினைகளை அகற்றும் விநாயகர் சதுர்த்தி
ஆன்மிகம்

வினைகளை அகற்றும் விநாயகர் சதுர்த்தி

தினத்தந்தி
|
12 Sept 2023 5:24 PM IST

சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

இந்த உலகத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாக விளங்குவது பிரணவ மந்திரமான 'ஓம்' என்பதாகும். இந்த மந்திரத்தின் வடிவமாக அருள்பவர்தான், மூல முதல் கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமான். 'விநாயகர்' என்பதற்கு 'தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர்' என்று பொருள். கணங்கள் அனைத்திற்கும் தலைவனாக விளங்குவதால் இவரை 'கணபதி' என்றும் அழைக்கிறார்கள். இவரை வணங்குபவர்களுக்கு தடைகள், இடையூறுகள் அனைத்தும் விலகிவிடும். அதனால்தான் எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன்பும், நாம் விநாயகரை முதலில் வணங்கி அந்தச் செயலை ஆரம்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். ஏனெனில் விநாயகர் அவதரித்தது ஒரு சதுர்த்தி திதியில்தான். தேய்பிறை, வளர்பிறை காலங்களில் சதுர்த்தி திதி வந்தாலும், ேதய்பிறையில் வரும் சதுர்த்தியை நாம் 'சங்கடஹர சதுர்த்தி' என்று போற்றுகிறோம். சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தியாக ேதய்பிறை சதுர்த்தி பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று கொண்டாடுகிறோம். ஏனெனில் விநாயகர் அவதரித்தது, ஒரு ஆவணி மாத சதுர்த்தி திதியில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

விநாயகரின் அவதாரம் மகிமைக்குரியதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி இங்கே பார்ப்போம்..

கயமுகன் என்ற அரக்கன், சிவபெருமானிடம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அந்த வரத்தின் காரணமாக தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற எண்ணத்தில் தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களை அடியோடு அழித்து, தேவலோகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான். அவனால் துன்பம் அடைந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

ஒரு முறை கயிலாயத்தில் பார்வதி தேவி மிகுந்த கவலையோடு இருந்தார். பரமசிவன், உலக உயிர்களுக்கு படியளப்பதற்காக தினமும் சென்று வரும் வேளையில், தான் தனிமையில் இருப்பதை எண்ணி அவர் மிகவும் வருந்தினார். அந்த நேரத்தில் தன்னிடம் விளையாட ஒரு மகன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதிய அவர், தான் உடலில் பூசியிருந்த வாசனை திரவியங்களை திரட்டி, அதில் ஒரு உருவத்தை செய்தார். அதற்கு உயிர் கொடுத்தபோது, தோன்றியவர்தான் விநாயகர். அவர் ஆரம்பத்தில் சாதாரணமாக மனித தலையுடன்தான் இருந்தார்.

பார்வதி தேவி தான் நீராடச் செல்கையில், தன் மகன் விநாயகரை அழைத்து, "நான் வரும் வரை இங்கே காவல் இரு. யாராக இருந்தாலும் உள்ளே விட வேண்டாம்" என்று சொல்லிச் சென்றார். பார்வதி நீராடச் சென்றதும், அங்கே சிவபெருமான் வந்தார். அவர் யார் என்று தெரியாத காரணத்தால், ஈசனையே தடுத்து நிறுத்தினார், விநாயகர். தன்னை தடுத்து நிறுத்தும் சிறு பாலகனைக் கண்டு ஈசனுக்கு கடுமையான கோபம் உண்டானது. அவர்கள் இருவருக்கும் கடுமையான போர் உண்டானது. ஒரு கட்டத்தில் ஈசன் தன்னுடைய திரிசூலத்தால், விநாயகரின் தலையை கொய்தார்.

அந்த நேரத்தில் நீராடி விட்டு வந்த பார்வதி, தன் மகனின் நிலை கண்டு துன்புற்றார். சிவபெருமானிடம், "இது நம் மகன். நான்தான் அவனை யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாம் என்று சொல்லிச் சென்றேன். எனக்கு என் மகன் உயிரோடு வேண்டும்" என்று மன்றாடினார். இதையடுத்து நந்தியை அழைத்த சிவபெருமான், ''வடக்கு நோக்கி தலை வைத்து படுத்திருக்கும் எந்த உயிராக இருந்தாலும், அதன் தலையைக் கொய்து கொண்டுவா" என்று உத்தரவிட்டார்.

நந்தி சென்ற நேரத்தில் முதலில் கண்ணில் தென்பட்டது ஒரு யானைதான். வடக்கு நோக்கி படுத்திருந்த அந்த யானையின் தலையைக் கொய்து வந்து, விநாயகரின் உடலோடு பொருத்தி, அவருக்கு உயிர் கொடுத்தார், சிவபெருமான். அதோடு பூத கணங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கும் வரத்தையும், பிரணவ வடிவமாக இருக்கும் விநாயகரைத்தான் முதலில் வணங்க வேண்டும் என்ற நியதியையும் ஈசன் கொண்டு வந்தார். இப்படி விநாயகர் அவதாித்த திருநாளாக, ஆவணி மாத சதுர்த்தி திதி உள்ளது.

அதன்பின்னர் விநாயகர் தேவர்களைக் காப்பதற்காக, கயமுகனுடன் போரிட்டார். ஆயுதங்களால் சாகாத வரம் பெற்றிருந்த அவனை, தன்னுடைய தந்தத்தை முறித்து தாக்கினார். கயமுகன் இறுதியில் ஆணவத்தின் மொத்த உருவமாக, மிகப்பெரிய பெருச்சாளி உருவம் எடுத்து விநாயகரை தாக்க முற்பட்டான். ஆனால் அவனை தன்னுடைய வாகனமாக்கி அவனுக்கு அருள் செய்தார், விநாயகப் பெருமான்.

விரதம் இருப்பது எப்படி?

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து 'என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் 'நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன்' என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது, களிமண் விநாயகரையோ, விநாயகர் படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். அப்போது, 'ஓம் ஸ்ரீ கணாதிபதயே, ஏகதந்தாய, லம்போதராய, ஹேரம்பாய, நாளி கேரப்ரியாய, மோதக பட்சணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமாநய ஸ்வாஹா' என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.

விதிமுறைப்படி நெய், சாதம், பருப்பு, பாயசம், உளுந்து வடை, அப்பம், இட்லி, கொண்டைக்கடலை, கொழுக்கட்டை, தேங்காய், வாழைப்பழம், இலந்தைப் பழம், நாவல் பழம், கொய்யாப்பழம் உள்ளிட்ட பழங்களை விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கலாம். தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைப்பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.

மகாபாரதம் எழுதிய விநாயகர்

விநாயகர் பல லீலைகளைச் செய்துள்ளார். அதில் ஒன்றுதான், வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதிய மகாபாரதம். வியாசர் மகாபாரதத்தை எழுத நினைத்தார். ஆனால் தான் சொல்லும் சுலோகத்திற்கு அர்த்தம் புரிந்து எழுதும் நபர் யார் இருக்கிறார்கள் என்று தேடினார். இறுதியில் அவர் விநாயகரை அணுகினார். ஆனால் விநாயகரோ, "நான் எழுத வேண்டும் என்றால், என் எழுத்து தடைபடாதபடி வேகமாக சொல்ல வேண்டும். எங்காவது நீங்கள் சுலோகம் சொல்லும் வேகத்தில் சுணக்கம் ஏற்பட்டால், நான் எழுதுவதை நிறுத்தி விடுவேன்" என்று கூறினார். அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர், தங்கு தடையின்றி மகாபாரத காவியத்திற்கான சுலோகங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். ஆரம்பத்தில் மயில் இறகால் எழுதிய விநாயகர், ஒரு கட்டத்தில் மயிறகு முறிந்து போய்விட, தன்னுடைய தந்தத்தில் ஒன்றை உடைத்து, மகாபாரத காவியத்தை எழுதியதாக விநாயகர் புராணம் சொல்கிறது.

விநாயகர் மந்திரம்

மூஷிக வாஹன மோதகஹஸ்த

சாமரகர்ண விளம்பிதஸீத்ர

வாமனரூப மஹேஸ்வரபுத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.

பொருள்:- விநாயகப் பெருமானே! எலியை வாகனமாக கொண்டவரே! கையில் கொழுக்கட்டையுடன் நீண்ட தும்பிக்கை மற்றும் அகன்ற காதுகளுடன் சிறிய உருவத்தில் காட்சியளிப்பவரே. சிவபெருமானின் மைந்தனே. எல்லா விக்கினங்களையும் நீக்கும் உமது திருப்பாதங்களை நான் வணங்குகின்றேன்.

மேலும் செய்திகள்