54 ஆண்டுகளுக்கு பிறகு நாளை சூரசம்காரம்.. பக்தர்களின் கவனம் பெற்ற குன்றத்தூர் முருகன் கோவில்
|சூரசம்கார நிகழ்ச்சியை காண சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வதம் செய்து ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்கார விழா நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.
குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்காரம் நிகழ்ச்சி மீண்டும் நடைபெற உள்ளது. இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோவிலில் இன்று முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை மாலை மலை அடிவாரத்தில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 54 ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுவதை காண சென்னை சுற்று வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கந்த சஷ்டி விழாவிற்காக கோவில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளன. சூரசம்காரம் நடைபெறும் இடம் இன்று பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்து, சமன் செய்யப்பட்டது. மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற உயிர்காக்கும் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து குன்றத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல் திருப்போரூர் கந்தசாமி கோவில், சிறுவாபுரி பாலசுப்ரமணியசுவாமி கோவில், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய கோவில், பெரும்பேடு ஸ்ரீ முத்துக்குமாரசாமி கோவில், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்கார விழாவிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் நாளை சூரசம்காரம் நடைபெறாது. அன்று கோவிலில் புஷ்பாஞ்சலி நடைபெறும்.