திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்
|திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.25 மணியளவில் தொடங்கியது. இதனால் நேற்று மாலை சுமார் 5 மணியில் இருந்தே குறைந்த அளவிலான பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். மேலும் நேற்று பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) மாலை 4.35 மணி வரை இருந்ததால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.